கேரள கன்னியாஸ்திரிகளால் கடத்தப்படவில்லை எங்களை யாரும் மதமாற்றம் செய்யவில்லை: பஜ்ரங் தளத்தால் பொய் வாக்குமூலம் தந்ததாக ஒப்புதல் வாக்குமூலம்
இதுகுறித்து நாராயண்பூர் மாவட்டம் அபுஜ்மத் பகுதியில் குக்ராஜோர் கிராமத்தில் வசிக்கும் கமலேஷ்வரி பிரதான் என்பவர் நேற்று அளித்த பேட்டியில், “நான் யாராலும் கடத்தப்படவில்லை. என் சொந்த விருப்பத்தின்படி பெற்றோரின் ஒப்புதலை பெற்று கேரள கன்னியாஸ்திரிகளுடன் ஆக்ராவுக்கு சென்று கொண்டிருந்தேன். அங்கிருந்து போபால் செல்ல இருந்தோம். போபாலில் ஒரு கிறிஸ்துவ மருத்துவமனையில் ரூ.10,000 சம்பளம், உணவு, தங்குமிட வசதியுடன் வேலை வழங்கப்படும் என்பதற்காக நான் அங்கே சென்று கொண்டிருந்தேன். எங்களை யாரும் மதமாற்றமும் செய்யவில்லை. எங்கள் குடும்பம் கடந்த ஐந்தாண்டுகளுக்கு மேலாக கிறிஸ்தவ மதத்தை பின்பற்றி வருகிறது.
நாங்கள் துர்க் ரயில் நிலையத்தில் சென்று கொண்டிருந்தபோது, பஜ்ரங் தளத்தை சேர்ந்தவர்கள் சிலர் எங்களிடம் வந்து, மிரட்டி, தகாத வார்த்தைகளால் பேசினர். பின்னர் அங்கு வந்த ரயில்வே போலீசார் எங்களை காவல்நிலையம் அழைத்து சென்றனர். அங்கு வந்த வலதுசாரி ஆதரவாளரான ஜோதி சர்மா என்ற பெண், கேரள கன்னியாஸ்திரிகள் எங்களை வலுக்கட்டாயமாக மத மாற்றம் செய்ய கடத்தி செல்வதாக பொய்யாக வாக்குமூலம் தர வேண்டும். அவர்கள் சொன்னதை செய்யவிட்டால் என் சகோதரனை சிறையில் தள்ளி அடிப்பார்கள் என பயந்து, கேரள கன்னியாஸ்திரிகள் மீது பொய்யாக வாக்குமூலம் தந்தோம். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கேரள கன்னியாஸ்திரிகள் அனைவரும் நிரபராதிகள். அவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.