விசாரணையை தீவிரப்படுத்தியது தர்மஸ்தலாவில் எஸ்.ஐ.டி நேரில் ஆய்வு: புகார்தாரரின் வாக்குமூலம் பதிவு
இந்த வழக்கை விசாரிக்க மாநில அரசு சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்தது. டிஜிபி பிரணோவ் மொஹந்தி தலைமையில் ஐபிஎஸ் அதிகாரிகள் எம்.என்.அனுசேத், சவுமியலதா, ஜிதேந்திர குமார் தயாமா ஆகியோர் அடங்கிய எஸ்.ஐ.டி விசாரணையைத் தொடங்கியிருக்கிறது. மங்களூரு மல்லிகட்டேவில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் எஸ்.ஐ.டி அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை தர்மஸ்தலா காவல் நிலைய ஆய்வாளரிடம் ஆதாரங்களைப் பெற்று அவரிடம் தகவல்கள் பெறப்பட்டன. டிஐஜி அனுசேத் இந்த வழக்கு விசாரணையை மேற்பார்வையிடும் அதிகாரியாகவும், ஐபிஎஸ் அதிகாரி ஜிதேந்திர தயாமா இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். டிஐஜி அனுசேத், எஸ்.ஐ.டி-யில் நியமிக்கப்பட்ட 20க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுடன் எஸ்.ஐ.டி அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார்.
எஸ்.ஐ.டி அதிகாரிகள் இந்த வழக்கு தொடர்புடைய ஒரு சில இடங்களில் நேற்று நேரில் ஆய்வு செய்தனர். மேலும், புகார்தாரரான முன்னாள் தூய்மை பணியாளர் நேற்று எஸ்.ஐ.டி அலுவலகத்திற்கு 2 வழக்கறிஞர்களுடன் விசாரணைக்கு ஆஜரானார். புகார்தாரரின் வாக்குமூலங்களைப் பெற்றதுடன், சம்பந்தப்பட்ட இடங்களில் நேரடியாக ஆய்வு செய்து எஸ்.ஐ.டி விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.