கிருஷ்ணரிடம் முதல்வர் பிரார்த்தனை செய்ததால் கன மழை பெய்கிறது: ராஜஸ்தான் அமைச்சர் சர்ச்சை கருத்து
ஜெய்ப்பூர் : ஒவ்வொரு முறையும் கிருஷ்ணர் முன்பு முதல்வர் பிரார்த்திக்கும் போது பலத்த மழை பெய்கிறது என்று ராஜஸ்தான் அமைச்சர் ஒருவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானில் முதல்வர் பஜன்லால் சர்மா தலைமையில் பாஜ ஆட்சி நடக்கிறது. இதில் தொழில் மற்றும் வர்த்தக துணை இணை அமைச்சர் கே.கே. விஷ்ணோய். பார்மர் மாவட்டம், பலோத்ரா என்ற இடத்தில் பலத்த மழையால் வீடுகள், சாலைகளில் தண்ணீர் தேங்கி பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது சம்மந்தமாக மாநில அமைச்சர் விஷ்ணோயிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் அளித்த பதிலில், ஒவ்வொரு முறை பாஜ அரசு அமையும் போதெல்லாம் பரத்பூரில் உள்ள கிருஷ்ணர் கோயிலில் முதல்வர் வழிபாடு நடத்துவார்.
அப்போதெல்லாம் பார்மர், பலோத்ரா பகுதியில் பலத்த மழை பெய்யும். அதனை தொடர்ந்து மழை குறைந்தால் தான் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை தொடர முடியும் என்று இந்திரனிடம் முதல்வர் கோரிக்கை வைக்கும் நிலை ஏற்படுகிறது என்றார். மாநில பாஜ அமைச்சரின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து காங்கிரஸ் எம்எல்ஏ ஹரிஷ் சவுத்ரி, ‘‘மனிதனால் உருவாக்கப்பட்ட பிரச்னைகளை தீர்க்கும் பொறுப்பை கடவுளிடம் ஒப்படைப்பது தவறானது.மேலும் உண்மையான பிரச்னையை திசை திருப்புவது ஆகும். பிரச்னையை அரசாங்கத்தால் தீர்க்க முடியவில்லை என்றும், பிரார்த்தனைகள் மட்டுமே உதவும் என்றும் மறைமுகமாகக் கூறியுள்ளார், என்றார்.