தமிழ்நாடு ஆளுநர் வழக்கில் வழங்கிய தீர்ப்பு எங்களுக்கும் பொருந்தும்; கேரளா அரசு மனுக்களை திரும்பப்பெற உச்ச நீதிமன்றம் அனுமதி: ஒன்றிய அரசின் கோரிக்கை நிராகரிப்பு
இதுபோன்ற சூழலில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக மாநில அரசு தொடர்ந்த வழக்கில் கடந்த ஏப்ரல் மாதம் உச்ச நீதிமன்றம் அதிரடியான ஒரு தீர்ப்பை வழங்கி இருந்தது. அதில், ‘‘மாநில அரசுகளால் சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்படும் மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர் ஆகியோர், மசோதா அனுப்பி வைக்கப்பட்ட அடுத்த மூன்று மாதங்களுக்குள் ஒப்புதல் வழங்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது. இந்த நிலையில் மசோதா விவகாரம் தொடர்பாக கேரளா அரசு தொடர்ந்திருந்த வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா மற்றும் அதுல் எஸ்.சந்துர்கர் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது கேரளா அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், ‘‘மசோதா தொடர்பான வழக்கில்ஏற்கனவே ஆளுநர்கள் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் உரிய தீர்ப்பை வழங்கி விட்டது. அது கேரளா விவகாரத்திற்கும் பொருந்தக் கூடியதாகும். எனவே எங்களது மாநில அரசு தரப்பில் தாக்கல் செய்துள்ள மனுவை நாங்கள் திரும்பப்பெற அனுமதி வழங்க வேண்டும் என்று தெரிவித்தார். இதற்கு ஒன்றிய அரசின் அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணி மற்றும் துஷார் மேத்தா ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.குறிப்பாக ஆளுநர் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக குடியரசு தலைவர் 14 கேள்விகளை எழுப்பி விளக்கம் கோரிய விவகாரம் என்பது தற்போது ஐந்து நீதிபதிகள் அமர்வு முன்பு விசாரணையில் உள்ளது. அதன் தீர்ப்பு வெளியாகும் வரை கேரளா அரசின் மனுவை திரும்பப்பெற அனுமதிக்க கூடாது என கூறினார்கள்.
இதையடுத்து நீதிபதிகள் உத்தரவில், ‘‘மசோதா விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் முன்னதாக வழங்கிய தீர்ப்பை அடிப்படையாக கொண்டு தான் கேரளா மாநில அரசு மனுக்களை திரும்பப் பெறுவதற்கு அனுமதி கேட்கிறது. அதற்கு எவ்வாறு தடை விதிக்க முடியும். எனவே இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரிக்கிறது என்று திட்டவட்டமாக தெரிவித்த நீதிபதிகள்,‘‘மசோதா விவகாரத்தில் ஆளுநருக்கு எதிராக கேரளா அரசு தொடர்ந்திருந்த மனுக்களை திரும்பப்பெறுவதற்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டனர். உச்ச நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கையால் ஆளுநர் விவகாரத்தில் தமிழ்நாடு ஆளுநர் வழக்கில் வழங்கிய உத்தரவு என்பது கேரளா உட்பட மாநிலங்களுக்கு பொருந்தும் என்பது உறுதியாகி உள்ளது.