12,000 ஊழியர்கள் பணி நீக்கம்: டிசிஎஸ் அறிவிப்பு
ஜூன் 30 2025 நிலவரப்படி, டிசிஎஸ் நிறுவனத்தின் பணியாளர்கள் எண்ணிக்கை 6,13,069ஆக இருந்தது. அண்மையில் முடிவடைந்த ஏப்ரல் ஜூன் வரையிலான காலாண்டில் கூடுதலாக 5,000 பணியாளர்கள் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் 12,000 பணியாளர்களை பணி நீக்கம் செய்ய டிசிஎஸ் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் வௌியிட்ட அறிக்கையில், “தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், சந்தை விரிவாக்கம், பணியாளர் சீரமைப்பு, பணியாற்றும் முறைகளில் ஏற்படும் மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் எதிர்காலத்துக்கு தயாராவதற்கான பயணத்தில் டிசிஎஸ் உள்ளது.
இதனால் 12,000 ஊழியர்களை பணி நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி நீக்க நடவடிக்கை 2026ம் நிதியாண்டில்(அதாவது ஏப்ரல் 2025 முதல் மார்ச் 2026 வரை) படிப்படியாக அமல்படுத்தப்பட உள்ளது. டிசிஎஸ்-சின் இந்த அறிவிப்பு இந்தியா மட்டுமின்றி உலகளவில் உள்ள அந்நிறுவன பணியாளர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. பாதிக்கப்படும் பணியாளர்களுக்கு தேவையான பொருத்தமான சலுகைகள், ஆலோசனை உள்ளிட்டவற்றை டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் வழங்கும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.