ரூ.2,291 கோடி கல்வி நிதி நிலுவை விவகாரம் தமிழக அரசு தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை
இந்த நிதியை வழங்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தலைமை.நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வின் முன்னிலையில் தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஒரு முறையீட்டை வைத்தார்.அதில், கடந்த மாதம் அதாவது ஜூன் 3ம் தேதி தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
கடந்த ஓராண்டாக ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு கொடுக்க வேண்டிய கல்வி நிதியை வழங்காமல் இருந்து வருவதால் சுமார் 48 லட்சம் மாணவர்கள் அதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இந்த விவகாரம் தொடர்பான முன்னதாக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே மாணவர்களின் கல்வியை கருத்தில் கொண்டு அந்த மனுவை அவசர வழக்காக பட்டியலிட்டு விசாரித்து உத்தரவிட வேண்டும்.
மேலும் தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியையும் உடனடியாக விடுவிக்க ஒன்றிய அரசுக்கு ஆணை பிறப்பிக்க வேண்டும் என்று தெரிவித்தார். இதையடுத்து அந்த கோரிக்கையை ஏற்பதாக தெரிவித்த நீதிபதிகள், வழக்கை வரும் ஆகஸ்ட்.1ம் தேதி நாளை விசாரிப்பதாக உத்தரவிட்டனர். இதையடுத்து கல்வி நிதியை விடுவிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் கே.விநோத் சந்திரன் ஆகியோர் அமர்வில் நாளை விசாரணைக்கு வருகிறது.