ஓடும் பேருந்தில் நிகழ்ந்த கொடூரம்; பிறந்த உடனே பச்சிளம் குழந்தையை ஜன்னல் வழியே வீசிய கல்நெஞ்ச தம்பதி: மகாராஷ்டிராவை உலுக்கிய பயங்கரம்
மும்பை: மகாராஷ்டிராவில் ஓடும் பேருந்தில் பிறந்த சில நிமிடங்களில் பச்சிளம் குழந்தையை ஜன்னல் வழியே வீசிய கல்நெஞ்ச தம்பதியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் புனேவிலிருந்து பர்பானி நோக்கிச் சென்ற தனியார் சொகுசுப் பேருந்தில் பயணம் செய்த 19 வயது ரித்திகா தேரே என்ற கர்ப்பணி பெண்ணுக்கு, பேருந்தில் அதிகாலை நேரத்தில் திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. அவருக்கு பேருந்திலேயே ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால், பிறந்த சில நிமிடங்களிலேயே, அந்தப் பெண்ணும் அவருடன் இருந்த அல்தாஃப் ஷேக் என்பவரும் சேர்ந்து, பச்சிளம் குழந்தையை ஒரு துணியில் சுற்றி, பேருந்தின் ஜன்னல் வழியாக வெளியே தூக்கி வீசியுள்ளனர்.
பேருந்தின் ஓட்டுநர் ஜன்னல் வழியே ஏதோ வீசப்படுவதைக் கண்டு விசாரித்தபோது, அப்பெண்ணுக்கு வாந்தி வந்ததாகக் கூறி நாடகமாடியுள்ளனர். அவ்வழியாக சாலையில் சென்ற ஒருவர், பேருந்திலிருந்து ஒரு மூட்டை வீசப்பட்டதைக் கண்டு சந்தேகமடைந்து, அதைத் திறந்து பார்த்தபோது உள்ளே பச்சிளம் குழந்தை இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அவர் காவல்துறை அவசர உதவி எண்ணுக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் விரைந்து வந்த ரோந்துப் பிரிவு காவலர்கள், அந்தப் பேருந்தை மடக்கிப் பிடித்து ரித்திகாவையும், அல்தாஃபையும் கைது செய்தனர்.
விசாரணையில், ‘குழந்தையை வளர்க்க எங்களிடம் வசதி இல்லை; அதனால் வீசிவிட்டோம்’ என்று அவர்கள் அளித்த வாக்குமூலம் போலீசாரையே அதிர்ச்சியில் உறைய வைத்தது. தங்களைக் கணவன்-மனைவி என்று கூறினாலும், அதற்கான எந்த ஆவணமும் அவர்களிடம் இல்லை என்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், இருவரிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.