சட்டீஸ்கரில் கேரள கன்னியாஸ்திரிகள் கைதை கண்டித்து திருவனந்தபுரத்தில் கிறிஸ்தவ அமைப்பினர் பிரமாண்ட பேரணி
சட்டீஸ்கர் பாஜ அரசின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் பல்வேறு கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில் திருவனந்தபுரத்தில் கேரள கத்தோலிக்க சபை சார்பில் கவர்னர் மாளிகையை நோக்கி பிரமாண்ட பேரணி நடைபெற்றது. கேரள பிஷப் கவுன்சில் தலைமையில் நடைபெற்ற இந்தப் பேரணி திருவனந்தபுரம் தியாகிகள் நினைவிடத்தில் இருந்து புறப்பட்டு கவர்னர் மாளிகை முன் அடைந்தது.
கேரள பிஷப் கவுன்சில் தலைவர் கர்டினல் மார்பசேலியோஸ், பிஷப்புகள் தாமஸ் ஜெ.நெட்டோ, மார் தாமஸ் தரயில், கிறிஸ்துதாஸ் உள்பட கத்தோலிக்க சபையை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரும் வாயில் கருப்பு துணி கட்டி கவர்னர் மாளிகை முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது பிஷப் மார் பசேலியோஸ் பேசியது: கன்னியாஸ்திரிகளின் தன்னலமற்ற சேவைகள் நம் நாட்டுக்கு மிகவும் இன்றியமையாததாகும். எந்த சிறைச்சாலையாலும் அதை தகர்க்க முடியாது என்றார்.