இந்தியாவிற்கு ரூ.816கோடி மதிப்புள்ள ஏவுகணைகள் விற்பனை: அமெரிக்கா ஒப்புதல்
நியூயார்க்: இந்தியா- பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட மோதலை தீர்த்து வைத்ததாக அதிபர் டிரம்ப் அறிவித்தது மற்றும் இந்தியாவிற்கு எதிராக 50 சதவீத வரி விதிப்பு, எச்1-பி விசா விவகாரம் உள்ளிட்டவற்றால் இந்தியா-அமெரிக்கா இடையேயான உறவில் அதிருப்தி நிலவி வந்தது. இந்நிலையில் இரு நாட்டுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்த பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.
இந்தோ-பசிபிக் மற்றும் தெற்காசிய பிராந்தியங்களில் அரசியல் ஸ்திரதன்மை மற்றும் அமைதிக்கு அமெரிக்கா ஒரு முக்கியமான சக்தி என்று இந்தியா தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்தியாவிற்கு ரூ.816கோடிக்கும் மேல் மதிப்புள்ள ஏவுகணைகள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்வதற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.
அமெரிக்காவின் பாதுகாப்பு ஒத்துழைப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘‘இந்தியாவிற்கு 47மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான எக்ஸ்காலிபர் ஏவுகணைகள் மற்றும் 45.7மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஜாவ்லின் ஏவுகணைகளையும் விற்பனை செய்வதற்கு அமெரிக்க வெளியுறவு துறை ஒப்புதல் அளித்துள்ளது. அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கான இந்தியாவின் திறனை மேம்படுத்தும்” என்று தெரிவித்துள்ளது.