ஆசிய கோப்பை யு23 கால்பந்து: கத்தாரிடம் இந்தியா தோல்வி
தோஹா: கத்தாரில் நடந்து வரும் ஆசிய கோப்பை யு23 கால்பந்து தகுதி போட்டியில் கத்தார் அணியிடம் இந்தியா தோல்வியை தழுவியது. கத்தாரின் தோஹா நகரில், 23 வயதுக்கு உட்பட்டோர் பங்கேற்கும் ஆசிய கோப்பை கால்பந்து தகுதி போட்டிகள் நடந்து வருகின்றன. கடைசியாக, பஹ்ரைன் நாட்டு அணியுடனான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி வாகை சூடியிருந்த இந்திய அணி, நேற்று முன்தினம் இரவு நடந்த போட்டியில் கத்தார் அணியுடன் மோதியது. போட்டியின் இடையில், இந்திய வீரர் பரம்வீர், முரட்டுத்தனமாக ஆடியதாக, சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். அதனால், 10 வீரர்களுடன் இந்திய அணி ஆட வேண்டிய நிலை ஏற்பட்டது.
இப்போட்டியில் கத்தார் வீரர் அல் ஹாஸ்மி அல் உசேன், போட்டியின் 18வது நிமிடத்தில் முதல் கோல் போட்டு அணியை முன்னிலைப்படுத்தினார். தொடர்ந்து, போட்டியின் 67வது நிமிடத்தில் கத்தார் அணியின் ஜஸீம் அல் ஷர்ஷானி பெனால்டி கார்னர் வாய்ப்பை அற்புதமாக பயன்படுத்தி 2வது கோலடித்து வலுவான நிலைக்கு தனது அணியை அழைத்து சென்றார். அதன் பின் கோல்கள் விழாததால், 2-0 என்ற கோல் கணக்கில் கத்தார் அணி, இந்தியாவை வீழ்த்தியது.