இந்திய சுதந்திர தினம்: சர்வதேச தலைவர்கள் வாழ்த்து
மாஸ்கோ: நாட்டின் சுதந்திர தினத்தையொட்டி ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளன. நாடு முழுவதும் நேற்று 79வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய நாட்டு மக்களுக்கு ரஷ்ய அதிபர் புடின் வாழ்த்து தெரிவித்து உள்ளார். ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் புடின் வாழ்த்து செய்தி அனுப்பி உள்ளார்.
ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சகம் : அறிவியல், தொழில்நுட்ப மற்றும் பிற துறைகளில் இந்தியா பரவலாக அங்கீகரிக்கப்பட்ட வெற்றியைப் பெற்றுள்ளது. உலக அரங்கில் முக்கிய பிரச்னைகளை தீர்ப்பதில் இந்தியா முக்கிய பங்களிக்கிறது. கூட்டு முயற்சிகள் மூலம் இந்திய ரஷ்ய ஒத்துழைப்பை தொடர்ந்து விரிவுபடுத்துவோம். பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன்: 79வது சுதந்திர தினத்தன்று இந்திய மக்களுக்கு அன்பான வாழ்த்துக்கள்! பிப்ரவரியில் எனது நண்பர் நரேந்திர மோடியை பிரான்சுக்கு வரவேற்றதை நான் நினைவு கூர்கிறேன்.
மேலும் 2047 மற்றும் அதற்குப் பிறகும் எங்கள் மூலோபாய கூட்டாண்மையை ஆழப்படுத்த ஆவலுடன் காத்திருக்கிறேன். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு: இஸ்ரேலும் இந்தியாவும் வரலாறு, புதுமை மற்றும் நட்பு ஆகியவற்றால் பிணைக்கப்பட்ட இரண்டு பெருமைமிக்க ஜனநாயக நாடுகள். நமது நாடுகள் ஒன்றாக நிறைய சாதித்துள்ளன. மேலும் நமது கூட்டாண்மையின் சிறந்த அத்தியாயங்கள் இன்னும் முன்னால் உள்ளன.
அமெரிக்க, வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ : இந்தியாவும் அமெரிக்காவும் ”ஒன்றாகச் செயல்படுவது” இன்றைய நவீன சவால்களை எதிர்கொள்ளும், இரு நாடுகளுக்கும் பிரகாசமான எதிர்காலத்தை உறுதி செய்யும் என்று தெரிவித்துள்ளார். மாலத்தீவு அதிபர் முகமது முய்சு: இந்தியா எப்போதும் மாலத்தீவின் நம்பகமான வளர்ச்சி பங்காளியாக இருந்து வருகிறது.
எங்கள் நாடுகளுக்கு இடையே உயர்மட்ட பரிமாற்றங்கள் மற்றும் மக்கள் தொடர்பு அதிகரிப்பதை நான் மிகவும் பாராட்டுகிறேன். இது நாங்கள் கட்டியெழுப்பிய வலுவான ஒத்துழைப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஈரான் வெளியுறவு அமைச்சகம், இந்தியாவிற்கு அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு, இரு நாடுகளுக்கும் இடையே ‘‘இருதரப்பு உறவுகள் மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் தெஹ்ரான் உறுதியாக உள்ளது என்று கூறியுள்ளது. ஆஸ்திரேலியா, சிங்கப்பூர்,உக்ரைன், நேபாளம்,இலங்கை நாடுகளும் வாழ்த்து தெரிவித்துள்ளன.