இந்தியா மீது 50% இறக்குமதி வரி அறிவித்த நிலையில் அமெரிக்கா உடனான வர்த்தக பேச்சுவார்த்தை திடீர் ரத்து: டிரம்ப் - புதின் சந்திப்பால் மாற்றம் ஏற்படுமா?
புதுடெல்லி: ரஷ்யாவிடம் இருந்து இந்தியா அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதைக் காரணம் காட்டி, இந்தியப் பொருட்கள் மீது ஏற்கெனவே விதிக்கப்பட்ட 25% இறக்குமதி வரிக்குக் கூடுதலாக, மேலும் 25% வரியை விதிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். இதனால், இந்தியாவின் மொத்த இறக்குமதி வரி 50% ஆக உயரும் நிலை ஏற்பட்டு, இரு நாடுகளுக்கும் இடையேயான பொருளாதார உறவுகளில் பெரும் பதற்றம் உருவாகியுள்ளது. இந்தப் பதற்றமான சூழலுக்கு மத்தியில், இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துச் செல்வதற்காக, வரும் 25 முதல் 29 வரை இந்தியாவிற்குப் பயணம் மேற்கொள்ளவிருந்த அமெரிக்கக் குழு, தனது பயணத்தை ஒத்திவைத்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையேயான ஆறாவது சுற்றுப் பேச்சுவார்த்தைக்கு நாள் குறிக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டிரம்ப் அறிவித்த புதிய வரி விதிப்பு வரும் வரும் 27ம் தேதி அமலுக்கு வரவுள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெறவிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வர்த்தக ஒப்பந்தத்தில், அமெரிக்காவின் வேளாண் மற்றும் பால்வளப் பொருட்களுக்கு இந்தியச் சந்தையில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பது அமெரிக்காவின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
ஆனால், இந்தியாவின் சிறு மற்றும் குறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் என்பதால், அதை ஏற்க முடியாது என்று இந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் 50% வரி விதிப்பு அறிவிப்பைத் தொடர்ந்து, பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில், சுதேசிப் பொருட்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இந்நிலையில், உக்ரைன் விவகாரம் தொடர்பாக அலாஸ்காவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் நடத்திய சந்திப்புக்குப் பிறகு, தனது நிலைப்பாட்டில் இருந்து டிரம்ப் சற்று இறங்கி வந்துள்ளார். ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது கூடுதல் வரி விதிக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போகலாம் என்று அவர் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தியா தனது முக்கிய கச்சா எண்ணெய் வாடிக்கையாளரான ரஷ்யாவை இழந்துவிட்டது. இரண்டாம் நிலை வரிகளை இந்தியா விதித்தால், அது பேரழிவை ஏற்படுத்தும். தேவைப்பட்டால் அதைச் செய்வேன்; ஆனால் அதற்கான தேவை ஏற்படாமல் போகலாம் என்று டிரம்ப் கூறியுள்ளார். இந்த நிலையில், இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டதால், இந்தியா மீதான வரி மேலும் அதிகரிக்குமா? அல்லது 50% வரிவிதிப்பில் மாற்றங்கள் வருமா? என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.