இந்தியாவிலேயே இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தை எட்டிய ஒரே அரசு திராவிட மாடல் அரசு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
சென்னை: இந்தியாவிலேயே இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தை எட்டிய ஒரே அரசு திராவிட மாடல் அரசு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். 'இதற்கு முன்பு, இரட்டை இலக்க வளர்ச்சி எட்டப்பட்டது 2010-11-ஆம் ஆண்டில். அப்போது கலைஞர் ஆட்சி' என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது; "இந்தியாவிலேயே இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்தை எட்டிக் காட்டியுள்ள ஒரே அரசு தமிழ்நாட்டின் திராவிட மாடல் அரசு!
இந்தியாவிலேயே அதிகபட்சமாக 9.69% பொருளாதார வளர்ச்சியுடன் தமிழ்நாடு முதலிடம் என்று கூறி வந்தோம் அல்லவா…
அதையும் தாண்டி, தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம் 11.19% என ஒன்றிய அரசின் திருத்தப்பட்ட மதிப்பீட்டில் வெளியாகியுள்ளது!
இதற்கு முன்பு, இரட்டை இலக்க வளர்ச்சி எட்டப்பட்டது 2010-11-ஆம் ஆண்டில். அப்போது கலைஞர் ஆட்சி! இப்போது கலைஞர் வழி நடக்கும் திராவிட மாடல் ஆட்சி! இரண்டுமே கழக ஆட்சி!
2030-ஆம் ஆண்டுக்குள்ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்றபோது பலரது புருவமும் உயர்ந்தது. "இது மிக உயர்ந்த இலக்கு, எப்படி சாத்தியமாகும்?" என்றார்கள்! இதே வேகத்தில் சென்றால், எதுவும் சாத்தியம் என்பது இப்போது மெய்ப்பிக்கப்பட்டுவிட்டது!
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின் (குறள் 666)" என தெரிவித்துள்ளார்.