இந்தியாவுக்கு எரிவாயு, நிலக்கரி சப்ளை செய்ய ரஷ்யா முடிவு: எரிசக்தி வர்த்தகத்தில் புதிய திருப்புமுனை
மாஸ்கோ: மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடையால் ஆசிய சந்தைகளை குறிவைத்துள்ள ரஷ்யா, இந்தியாவுக்கு திரவ இயற்கை எரிவாயு மற்றும் நிலக்கரி விநியோகத்தை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. உக்ரைன் மீதான படையெடுப்பைத் தொடர்ந்து மேற்கத்திய நாடுகள் விதித்த பொருளாதாரத் தடைகளால், ரஷ்யா தனது எரிசக்தி ஏற்றுமதியை ஆசிய சந்தைகளை நோக்கி திருப்பும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதேசமயம், இந்தியாவும் தனது எரிசக்தி தேவைகளில் இயற்கை எரிவாயுவின் பங்கை அதிகரிக்கும் இலக்கை அடைவதற்காக, மலிவு விலையில் எரிசக்தியை வழங்கும் நாடுகளை நாடி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, ரஷ்யாவிடம் இருந்து சலுகை விலையில் கச்சா எண்ணெயை இந்தியா தொடர்ந்து வாங்கி வருகிறது. இந்த சூழலில், எரிவாயு துறையில் இரு நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஏற்கனவே பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தன. ஆனால் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை அமெரிக்கா தொடர்ந்து கண்டித்து வருகிறது. மேலும் இந்தியாவுக்கு எதிராக 50% இறக்குமதி வரியையும் விதித்துள்ளது. இதனால் இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவில் முட்டுக்கட்டைகள் நீடித்து வருகின்றன.
இந்நிலையில், எரிசக்தி உச்சி மாநாடு ஒன்றில் பேசிய ரஷ்ய எரிசக்தித்துறை அமைச்சர் செர்ஜி சிவிலேவ், இந்தியாவுக்கான எரிசக்தி விநியோகத்தை அதிகரிக்கும் திட்டத்தை உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘இந்தியா தனது எரிசக்தி தேவையில் இயற்கை எரிவாயுவின் பங்கை 15 சதவீதமாக உயர்த்தும் இலக்கை எட்டுவதற்கு உதவ, தற்போதைய மற்றும் எதிர்கால திட்டங்களில் இருந்து திரவ இயற்கை எரிவாயுவை வழங்க ரஷ்யா தயாராக உள்ளது. மேலும், 2035ம் ஆண்டுக்குள் இந்தியாவுக்கான நிலக்கரி ஏற்றுமதியை 40 மில்லியன் டன்னாக உயர்த்துவதற்கும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது’ என்று கூறினார்.
அமெரிக்காவின் பொருளாதாரத் தடை காரணமாக, ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் குறைக்கலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ரஷ்யாவின் இந்த புதிய அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.