உங்களுக்கு உதவுவதற்காக இந்தியா அங்கு வரவில்லை: சச்சின் டெண்டுல்கர் சாடல்
மும்பை: உங்களுடைய பவுலர்கள், வீரர்கள் சென்று ஓய்வு பெறவேண்டும், அடுத்த போட்டிக்கு தயாராக வேண்டும் என்பதற்காக நாங்கள் கைக்குலுக்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது எப்படி சரி? என 4வது டெஸ்ட் போட்டியில் ஸ்டோக்ஸ் உடன் ஜடேஜா கைக்குலுக்க மறுத்தது குறித்து சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிக்கு இடையேயான 4வது டெஸ்ட் போட்டி டிராவை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, குறைந்தபட்ச ஓவர்கள் மட்டுமே மீதமுள்ள நிலையில், இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், காலத்தின் நின்று விளையாடி கொண்டிருந்த இந்திய வீரர்களான ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தரை நோக்கி நடந்து சென்று கைகுலுக்கி டிராவை முன்மொழிந்தார்.
இருப்பினும் ஜடேஜா, வாஷிங்டன் ஜோடி தங்கள் சதங்களை நெருங்கிக்கொண்டிருந்தபோது, அந்த கோரிக்கையை மறுத்தது. இது இங்கிலாந்து வீரர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. மேலும் அவர்கள் இந்திய வீரர்களை சில மோசமான வார்த்தைகளால் திட்டினர். இதையடுத்து ஸ்டோக்ஸ் தனது முன்னணி பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்த மறுத்து, அதற்கு பதிலாக ஹாரி புரூக்கிடம் பந்தை கொடுத்து இந்திய வீரர்களை கேலி செய்தார்.
இந்த சம்பவம் குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் கடுமையாக சாடியுள்ளார். "தொடர் உயிருடன் இருந்தது, எனவே அவர்கள் ஏன் கைகுலுக்கி இங்கிலாந்து பந்து வீச்சாளர்களுக்கும் பீல்டர்களுக்கும் ஓய்வு கொடுக்க வேண்டும்? இங்கிலாந்து ஹாரி புரூக்கிடம் பந்தை ஒப்படைக்க விரும்பினால், அது பென் ஸ்டோக்ஸின் விருப்பம்.
அது இந்தியாவின் பிரச்சினை அல்ல. அவர்கள் சதம் அடிக்க அல்ல, டிராவிற்காக விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் பேட்டிங் செய்ய வந்தபோது அவுட்டாகியிருந்தால், நாங்கள் தோற்றிருக்கலாம். அவர்கள் பேட்டிங் செய்ய வந்தபோது, ஹாரி புரூக் பந்து வீசவில்லை, இல்லையா? அப்படியானால், 5வது டெஸ்டுக்கு இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் ஏன் புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டும்?.
உங்களுடைய பவுலர்கள், வீரர்கள் சென்று ஓய்வு பெறவேண்டும், அடுத்த போட்டிக்கு தயாராக வேண்டும் என்பதற்காக நாங்கள் கைக்குலுக்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பது எப்படி சரி?. இதற்கு உங்களிடம் பதில் இருக்கிறதா?, இல்லை. உங்களுக்கு உதவுவதற்காக இந்தியா அங்கு வரவில்லை." என சச்சின் தெரிவித்துள்ளார்.