இந்தியா - சீனா இடையே பதற்றம் தணிக்க எல்லைப் பிரச்னைக்கு 5 அம்சத் திட்டம்: இருதரப்பு உறவில் புதிய அத்தியாயம்
புதுடெல்லி: கடந்த 2020ம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதல்களுக்குப் பிறகு இந்தியா - சீனா இடையேயான உறவுகளில் கடும் விரிசல் ஏற்பட்டது. அந்த விரிசலை சரிசெய்யும் விதமாக, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீயும் டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசினர். முன்னதாக நேற்று முன்தினம் இரு நாடுகளின் சிறப்புப் பிரதிநிதிகள் மட்டத்திலான 24வது சுற்றுப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. தொடர்ந்து வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் பிரதமர் மோடியையும் சீன அமைச்சர் வாங் யீ சந்தித்தார்.
கடந்த அக்டோபர் 2024ல் நடந்த கசான் உச்சிமாநாட்டில் எட்டப்பட்ட தலைவர்களின் கருத்தொற்றுமையின் அடிப்படையில், உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு நெடுகிலும் அமைதி நிலவுவதை இரு தரப்பும் ஏற்றுக்கொண்டன. இந்த பேச்சுவார்த்தையின் முடிவில், சிக்கலான எல்லைப் பிரச்னையைக் கையாளவும், ஒருங்கிணைப்பை ஆழப்படுத்தவும் ஐந்து அம்சத் திட்டம் வகுக்கப்பட்டது. அதன்படி, 2005ம் ஆண்டு வழிகாட்டு நெறிமுறைகளின்படி, நியாயமான மற்றும் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வைக் காண வேண்டும். எல்லை வரையறையில் எளிதில் தீர்வு காணக்கூடிய பகுதிகளைக் கண்டறிய நிபுணர் குழு அமைக்கப்படும். எல்லையில் நீடித்த அமைதியை உறுதிசெய்ய பிரத்யேக செயற்குழு உருவாக்கப்படும். மேற்குப் பகுதிக்கு மட்டுமிருந்த பொதுநிலை அமைப்பு, கிழக்கு மற்றும் மத்தியப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.
இறுதியாக, பதற்றத்தைக் குறைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகளைத் தொடங்கவும் இருதரப்பும் ஒப்புக்கொண்டுள்ளன. இந்த பேச்சுவார்த்தை வெளிப்படையாகவும் ஆக்கப்பூர்வமாகவும் அமைந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த கால பின்னடைவுகளைக் கடந்து, கட்டமைக்கப்பட்ட பேச்சுவார்த்தைகள் மூலம் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்ப இருதரப்பும் விருப்பம் தெரிவித்துள்ளன. இந்த முக்கிய நகர்வானது, ஆசியாவின் இரு பெரும் சக்திகளுக்கு இடையேயான உறவில் புதிய கட்டத்தின் தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது. அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தை 2026ம் ஆண்டு சீனாவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.