இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இதய ஸ்டென்ட்டுக்கு உலகளாவிய அங்கீகாரம்
சான்பிரான்சிஸ்கோ: அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் சர்வதேச இதய நோய் நிபுணர்களின் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் டெல்லி பத்ரா மருத்துவமனையின் தலைவரும் பிரபல இதய நோய் நிபுணருமான உபேந்திர கவுல், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சுப்ராபிளெக்ஸ் குருஸ் என்ற இதய ஸ்டென்ட் கருவியின் சோதனை முடிவுகளை வெளியிட்டு பேசுகையில்,‘‘சுப்ராபிளெக்ஸ் குருஸ் சர்வதேச புகழ் பெற்ற அமெரிக்க தயாரிப்பான ஜியன்ஸுடன் ஒப்பிடும் போது குறைந்த தோல்வி விகிதம் கொண்டுள்ளது. இந்தியாவில் உள்ள 66 நகரங்களில் உள்ள இதயவியல் நோய் மையங்களில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. நீரிழிவு மற்றும் பல்வேறு நோய்கள் கொண்ட மிகவும் சிக்கலான நோயாளிகளை மையமாக கொண்டு சோதனை நடத்தப்பட்டது. 80 சதவீதம் பேர் 3 நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள்.இந்த சோதனையில் இந்திய ஸ்டென்ட் கருவிக்கான முடிவுகள் மிகவும் சாதகமாக இருந்தன. இது சர்வதேச தரத்தை விட குறைவானது அல்ல என்பதை காட்டுகிறது’’ என்றார். இந்திய மருத்துவ சாதன உற்பத்தியின் தொழில்நுட்ப சிறப்பிற்கு ஒரு எடுத்துக்காட்டாக,இந்த முடிவுகள் மாநாட்டில் பாராட்டப்பட்டன.
