இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி மழையால் ரத்து!
கான்பரா: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டுள்ளது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 9.4 ஓவருக்கு 97 ரன்கள் குவித்திருந்த நிலையில், மழையால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டி இன்று கான்பராவில் தொடங்கியது. ஆஸ்திரேலிய கேப்டன் மிட்செல் மார்ஷ் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் இந்திய அணி களமிறங்கியது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதிரடி தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா 19 ரன்கள் எடுத்திருந்தபோது நாதன் எல்லிஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். சுப்மன் கில் உடன் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கைகோர்த்தார்.
இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி கொண்டிருந்தனர். இந்தியா 9.4 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 97 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டது. ஓயாமல் பெய்த மழையால் ஆட்டத்தை மீண்டும் தொடங்காத நிலை ஏற்பட்டது. இதனால் இரு அணிகளுக்கிடையேயான முதல் டி20 போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
சூர்யகுமார் யாதவ் 24 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 39 ரன்களும், சுப்மன் கில் 20 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 37 ரன்களும் எடுத்தனர். இரு அணிகளுக்கிடையேயான 2து டி20 போட்டி அக்டோபர் 31 வெள்ளிக்கிழமை இந்திய நேரப்படி பிற்பகல் 1.45 மணிக்கு தொடங்க உள்ளது .