இந்தியா ஏ- ஆஸி ஏ 4 நாள் டெஸ்ட் டிரா: சதமடித்த படிக்கல் ஆட்ட நாயகன்
லக்னோ: இந்தியா ஏ - ஆஸ்திரேலியா ஏ அணிகள் இடையிலான அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. ஆஸ்திரேலியா ஏ ஆடவர் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து, அதிகாரப்பூர்வமற்ற ஒரு டெஸ்ட் போட்டியில் ஆடியது. கடந்த 16ம் தேதி துவங்கிய டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சை துவக்கியது. அந்த அணியின் துவக்க வீரர் சாம் கோன்ஸ்டாஸ், ஜோஷ் பிலிப் சதங்கள் விளாசினர்.
2ம் நாளின் முதல் பகுதியில், 6 விக்கெட் இழப்புக்கு 532 ரன் குவித்து, ஆஸி அணி டிக்ளேர் செய்தது. அதையடுத்து, இந்தியா ஏ முதல் இன்னிங்சை துவக்கியது. இந்திய வீரர்களும், ஆஸிக்கு சளைக்காமல் ரன் குவிப்பில் ஈடுபட்டனர். தேவ்தத் படிக்கல் 150, துருவ் ஜுரெல் 140 (197 பந்து), சாய் சுதர்சன் 73 ரன் குவிக்க, 4ம் நாளான நேற்று, இந்திய அணி, 7 விக்கெட் இழப்புக்கு 531 ரன் குவித்து டிக்ளேர் செய்தது.
பின்னர், ஒரு ரன் முன்னிலையுடன் ஆஸி 2ம் இன்னிங்சை ஆடியது. கடைசி நாளான நேற்றைய ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி, ஆஸி, 56 ரன் எடுத்திருந்தது. துவக்க வீரர்கள் சாம் கோன்ஸ்டாஸ் 27, கேம்ப்பெல் கெல்லவே 24 ரன்னுடன் களத்தில் இருந்தனர். அதனால், இப்போட்டி வெற்றி, தோல்வியின்றி டிராவில் முடிந்தது. ஆட்ட நாயகனாக, தேவ்தத் படிக்கல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.