வளர்ந்த இந்தியா விவகாரம் பிரதமரின் ஆலோசகரை விமர்சித்த முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி
புதுடெல்லி: பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசனைக்குழு உறுப்பினராக இருக்கும் சஞ்சீவ் சன்யால் கடந்த சில நாட்களுக்கு முன்பு,’ இந்தியா வளர்ந்த நாடாக மாறுவதற்கு நீதித்துறைதான் மிகப்பெரிய ஒற்றை தடையாக உள்ளது’ என்றார். இதை உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி அபய் எஸ் ஓகா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அவர் கூறியதாவது: இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் நீதித்துறை மற்றும் நீதித்துறை உத்தரவுகள் குறித்து ஆக்கபூர்வமான விமர்சனங்களை வழங்க உரிமை உண்டு. எந்த நிலையிலும், அந்த உரிமையை நாம் ஆதரிக்க வேண்டும். பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர் சஞ்சீவ் சன்யால் கற்றறிந்த மனிதர். வளர்ந்த இந்தியாவாக மாறுவதை தடுத்த நீதித்துறை உத்தரவுகளின் உதாரணங்களை அவர் வழங்கியிருக்க வேண்டும். அந்த உத்தரவுகளின் விவரங்களையும் அவர் வழங்கியிருக்க வேண்டும். அவர் அப்படிச் செய்திருந்தால், அவரது விமர்சனம் ஆக்கபூர்வமான விமர்சனமாக மாறியிருக்கும், அது மிகவும் வரவேற்கத்தக்கது. இவ்வாறு அபய் எஸ். ஓகா கூறியுள்ளார்.
* அவருக்கு எதுவுமே புரியல
உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் தலைவரும் மூத்த வழக்கறிஞருமான விகாஸ் சிங் கூறுகையில்,’ பிரதமர் மோடியின் பொருளாதார ஆலோசனைக்குழு உறுப்பினராக இருக்கும் சஞ்சீவ் சன்யாலின் கருத்து பொறுப்பற்றது. மிகவும் மோசமானது. அவரது கருத்தை பார்க்கும் போது நீதிமன்றங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது பற்றிய புரிதலின்மையைக் காட்டுகின்றன. உயர் நீதிமன்ற விடுமுறைகள் குறித்து கருத்து தெரிவிப்பவர்கள், இந்த உயர் நீதிமன்றங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் பற்றிய புரிதல் இல்லாதவர்களாகவே உள்ளனர். உயர் நீதிமன்றத்தில் விடுமுறை என்ற கருத்தைப் புரிந்து கொள்ள, ஒரு பரபரப்பான வழக்கறிஞர் அல்லது நீதிபதி சாதாரண நேரங்களில் செய்யும் வேலையை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்’ என்றார்.
