ஆசிய அலைச்சறுக்கு போட்டியில் முதல்முறையாக பதக்கம் வென்ற இந்தியா
மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் ஆசிய அலைச்சறுக்கு போட்டியின் இறுதிச் சுற்றில், இன்று முதன்முறையாக இந்திய வீரர் ஒருவர் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். ஆசியன் அலைச்சறுக்கு கூட்டமைப்பு மற்றும் இந்திய அலைச்சறுக்கு கூட்டமைப்பு இணைந்து, தமிழ்நாடு அரசின் ஒத்துழைப்புடன் மாமல்லபுரத்தில் கடந்த 4ம் தேதி முதல் ஆசிய அலைச்சறுக்கு போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் இந்தியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், சீனா, இந்தோனேசியா, ஜப்பான், தென்கொரியா, குவைத், லெபனான், மலேசியா, மாலத்தீவுகள் உள்பட 19 நாடுகளை சேர்ந்த 102 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். அன்று முதல் நாள்தோறும் பல்வேறு சுற்றுகள் அடிப்படையில் போட்டிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், இன்று காலை ஆண்களுக்கான ஓபன் இறுதி போட்டி பரபரப்புடன் துவங்கியது. இதில், அலைச்சறுக்கு பலகை மூலமாக, கடலில் இந்தியா, கொரியா, இந்தோனேசியா நாடுகளை சேர்ந்த 4 வீரர்கள் பல்வேறு சாகசங்கள் நிகழ்த்தினர். இறுதியில், கொரியா நாட்டை சேர்ந்த கனோவா ஹீஜே முதலிடம் பிடித்து தங்க பதக்கமும், இந்தோனேசியாவை சேர்ந்த பஜர் அரியானா 2ம் இடம் பிடித்து வெள்ளி பதக்கமும், இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த ரமேஷ் புடிஹால் 3ம் இடம்பிடித்து, வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்தனர். குறிப்பாக, ஆசிய அலைச்சறுக்கு போட்டியில் இந்திய வீரர் ஒருவர் வெண்கலப் பதக்கம் வென்றிருப்பது இதுவே முதல்முறையாகும்.
இதேபோல், பெண்கள் ஓபன் பிரிவில் ஜப்பான் வீராங்கனை அன்ரி மாட்சுனோ தங்க பதக்கமும், ஜப்பான் வீராங்கனை சுமோமோ சாடோ வெள்ளி பதக்கமும், தாய்லாந்து வீராங்கனை இசபெல் ஹீக்ஸ் வெண்கல பதக்கமும் வென்று அசத்தினர். அலைச்சறுக்குப் போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் முதல் 3 இடங்களை வென்ற வீரர் - வீராங்கனைகளுக்கு வரும் 12ம் தேதி மாலை பதக்கங்கள் மற்றும் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.