இந்தியாவில் 140 கோடி மக்கள் இருந்தும் எங்களின் மக்காசோளத்தை வாங்குவதில்லையே ஏன்..? எச்சரிக்கை விடுத்த அமெரிக்க வர்த்தக செயலர்
‘வாஷிங்டன்: இந்தியா தனது இறக்குமதி வரிகளைக் குறைக்கவில்லை என்றால், வர்த்தகத்தில் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதைக் காரணம் காட்டி, இந்தியப் பொருட்கள் மீது அமெரிக்கா சமீபத்தில் 50 சதவீதம் வரை கூடுதல் வரி விதித்தது. இதில், இந்தியப் பொருட்களுக்கு விதிக்கப்படும் அதிகப்படியான வரிக்கு 25 சதவீதமும், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதற்காக 25 சதவீதமும் விதிக்கப்பட்டது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை ‘அநியாயமானது, நியாயமற்றது மற்றும் ஏற்க முடியாதது’ என்று கண்டித்த இந்தியா, தனது எரிசக்தி கொள்முதல் தேசிய நலன் மற்றும் உலகளாவிய சந்தை நிலவரங்களின் அடிப்படையிலானது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தது. இந்தச் சூழலில், அமெரிக்க வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட் லூட்னிக், இந்தியாவின் வர்த்தகக் கொள்கைகளை கடுமையாகச் சாடியுள்ளார். அவர் கூறுகையில், ‘இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தக உறவு ஒருதலைப்பட்சமாக உள்ளது. இந்தியா தனது அனைத்துப் பொருட்களையும் அமெரிக்காவுக்கு விற்கிறது. ஆனால் அமெரிக்க விவசாயப் பொருட்கள், குறிப்பாக மக்காச்சோளத்தை வாங்குவதில்லை.
140 கோடி மக்கள் தொகையைக் கொண்ட இந்தியா, எங்களிடமிருந்து சிறிதளவு மக்காச்சோளத்தைக் கூட வாங்காதது ஏன்? இந்தியா தனது இறக்குமதி வரிகளைக் குறைக்கவில்லை என்றால், அமெரிக்கா வேறு வழியில் வரிகளை விதிக்கும். அதிபர் டிரம்பின் கொள்கையானது நியாயமான மற்றும் பரஸ்பர வர்த்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. இதை ஏற்காத நாடுகள், உலகின் மிகப்பெரிய நுகர்வோரான அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்வதில் கடும் சிரமங்களைச் சந்திக்க நேரிடும்’ என பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த மிரட்டல், இருதரப்பு வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் மேலும் தடைகளை ஏற்படுத்தக்கூடும் எனக் கருதப்படுகிறது.