இந்தியா வல்லரசாக உருவெடுக்கும்: இஸ்ரேல் மூத்த அதிகாரி பாராட்டு
டெல் அவிவ்: இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையேயான உறவுகளை வலுப்படுத்தும் விதமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருநாட்டு அதிகாரிகளும் டெல்லியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில், இஸ்ரேல் வெளியுறவுத்துறையின் தலைமை இயக்குநர் ஈடன் பார் டால், இந்தியாவுடனான உறவு மற்றும் உலகளாவிய அச்சுறுத்தல்கள் குறித்து விரிவாகப் பேசியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்:
இந்தியா விரைவில் மாபெரும் வல்லரசாக உருவெடுக்கும். இயற்கை வளங்களை விட மனித வளத்தின் மீது இஸ்ரேல் அதிக நம்பிக்கை கொண்டுள்ளது. திறமையான மனித வளம் இந்தியாவில் ஏராளமாக உள்ளது. மக்களின் திறமைகளை ஊக்குவிக்கும் போது, அவர்கள் நாட்டை கட்டமைத்து வெற்றி பெறச் செய்கிறார்கள். இதற்கு இந்தியா ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கிறது. இந்திய மக்களுடனும், அரசுடனும் மேலும் வலுவான உறவை ஏற்படுத்த அதிக அளவில் முதலீடுகளை இஸ்ரேல் மேற்கொள்ளும். வாய்ப்புகள் மற்றும் அச்சுறுத்தல்கள் குறித்த கண்ணோட்டத்தில் இந்தியாவும் இஸ்ரேலும் ஒரே மாதிரியான பார்வையைக் கொண்டுள்ளன.
தீவிரவாத சித்தாந்தம் கொண்டவர்கள் வன்முறை மூலம் தங்களை விரிவுபடுத்திக் கொள்ள விரும்புகிறார்கள். இத்தகைய ஜனநாயக விரோத மற்றும் விரிவாக்க சக்திகளை அடையாளம் காண வேண்டும். இவர்களுக்கு எதிராக இந்தியாவும், இஸ்ரேலும் மிக நெருக்கமாக ஒத்துழைக்க வேண்டியது அவசியம். இந்தியா, இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் சில வளைகுடா நாடுகள் இணைந்து மிதவாத நாடுகளின் கூட்டணியை வலுப்படுத்த வேண்டும். உலகை சீர்குலைக்க நினைப்பவர்களுக்கு எதிராக, வரலாற்று மற்றும் கலாசாரப் பிணைப்புகளைக் கொண்டு இணைந்து செயல்பட வேண்டும். அப்போது உலகிற்கு சிறந்த எதிர்காலத்தை நம்மால் வழங்க முடியும்’ என்றும் ஈடன் பார் டால் நம்பிக்கை தெரிவித்தார்.