வங்கக்கடலில் நவ.22ல் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை : வங்கக்கடலில் நவ.22ல் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் மேற்கு வங்கக் கடலில் கடந்த 14 ம் தேதி ஒரு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி கடந்த இரண்டு நாட்களாக அதே இடத்தில் நிலவியது. தற்போது இலங்கை நிலப்பரப்புக்கு மேல் பகுதியில் நிலவுகிறது என்றும், மன்னர் வளைகுடா நோக்கி லேசாக நகர தொடங்கியதும் தமிழகத்தில் கனமழை தொடரும் எனவும் வானிலை மையம் தெரிவித்து இருந்தது. அதாவது இன்று பிற்பகலுக்கு பிறகு மழை தீவிரமடையும் என்று கூறப்பட்டிருந்தது. இதனால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழைக்கும், டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியிருந்தது.
இந்த நிலையில் தான் தற்போது வங்கக் கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது வரும் 22ம் தேதி வங்கக் கடலில் இன்னொரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்தடுத்த நாட்களில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளது. இதனால் தமிழகத்தில் வரும் 21, 22ம் தேதிகளில் கனமழை வெளுத்து வாங்கும். கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.