இந்தியா-அமெரிக்கா இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தை சரியான திசையில் செல்கிறது: ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் தகவல்!
டெல்லி: ஐக்கிய அரபு அமீரக (யுஏஇ) தலைநகர் அபுதாபியில் நேற்று இந்திய, யுஏஇ உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றிய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்றார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது; அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தை குழுவின் தலைவர் பிரென்டன் லிஞ்ச், கடந்த 16ம் தேதி டெல்லியில் இருந்தார். இந்திய குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தியாவும் அமெரிக்காவும் மிக நெருங்கிய நட்பு நாடுகள். இரு நாடுகள் இடையிலான வர்த்தக பேச்சுவார்த்தை சரியான திசையில் செல்கிறது. இரு நாடுகளுக்கும் பலன் அளிக்கும் வகையில் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும். அமெரிக்கா எங்களது நம்பகமான கூட்டாளி. இவ்வாறு அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
இந்தியா, அமெரிக்கா இடையே இதுவரை 5 சுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்று உள்ளன. ஆகஸ்ட் 25ம் தேதி 6-ம் சுற்று பேச்சுவார்த்தை நடைபெறுவதாக இருந்தது. ஆனால் இந்திய பொருட்கள் மீது அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் 50 சதவீத வரி விதித்ததால் பேச்சுவார்த்தை தடைபட்டது. இந்த சூழலில் அமெரிக்க வர்த்தக குழுவினர் சில நாட்களுக்கு டெல்லி வந்தனர். அப்போது கருத்து வேறுபாடுகள் களையப்பட்டு பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டது. இரு நாடுகள் இடையே விரைவில் 6ம் சுற்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதில் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.