இந்தியா மூன்றாவது சிறந்த பொருளாதார நாடாக மாறுவதை நோக்கி வேகமாக நகர்கிறது: பிரதமர் மோடி
பெங்களூரு: பெங்களூரின் ஆர்.வி.ரோடு - பொம்மசந்திரா இடையே மஞ்சள் வழித்தடத்தில் ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரெயில் சேவையையும், 3 வந்தே பாரத் ரெயில் சேவையையும், பிரதமர் நரேந்திர மோடி இன்று துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
புதிய இந்தியாவின் அடையாளமாக பெங்களூரு மாறியுள்ளது. உலக அளவில் தொழில்நுட்பத்துறை இந்தியாவின் கொடியை ஏற்றிய நகரம் இது என்றால் மிகையல்ல. பெங்களூரூவின் வெற்றிக்கு பின்னணியில் இங்குள்ள மக்களின் கடுமையான உழைப்பும் திறமையும்தான் காரணம். இந்தியா மூன்றாவது சிறந்த பொருளாதார நாடாக மாறுவதை நோக்கி வேகமாக நகர்கிறது. இந்தியாவின் 50 சதவீதத்திற்கும் அதிகமான பணப்பரிவர்த்தனை யுபிஐ மூலம் நடக்கிறது.
ஆபரேஷன் சிந்தூரின் வெற்றிக்கு நமது தொழில்நுட்பமும்,மேக் இன் இந்தியா திட்டமும் தான் காரணம். இந்தியப் படைகளின் வெற்றியையும், எல்லை தாண்டி பல கிலோமீட்டர் தொலைவில் எதிரிகளை அழித்ததையும் உலகம் கண்டது.
கடந்த 2014ம் ஆண்டில் நம் நாட்டில் வெறும் 5 நகரங்களில் மட்டுமே மெட்ரோ ரெயில் சேவை இருந்தது. தற்போது, 24 நகரங்களில் சுமார் 1,000 கிலோ மீட்டருக்கும் அதிகமான தொலைவுகளில் மெட்ரோ ரெயில் சேவை வழங்கப்படுகிறது.2014ல் 3 தேசிய நீர்வழிகள் மட்டுமே செயல்பாட்டில் இருந்தன, இப்போது 30 நீர்வழிகள் உள்ளன. 2014 வரையில் இந்தியாவில் வெறும் 74 விமான நிலையங்கள் மட்டுமே இருந்தன. தற்போது அதன் எண்ணிக்கை 160க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது என கூறினார்.