இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா 489 ரன்கள் குவிப்பு
கவுகாத்தி: இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா 489 ரன்கள் குவித்தனர். தென் ஆப்பிரிக்கா அணியில் செனுரான் முத்துசாமி 109, மார்கோ, ஜான்சன் 93 ரன்கள் எடுத்தனர். இந்திய அணியில் குல்தீப் யாதவ் 4, பும்ரா, ஜடேஜா, சிராஜ் தலா விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் கொல்கத்தாவில் நடந்த முதலாவது டெஸ்டில் தென் ஆப்பிரிக்கா 30 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பார்சபரா ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 81.5 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 247 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் போதிய வெளிச்சமின்மை காரணமாக முதல் நாள் ஆட்டம் முன்கூட்டியே முடித்து கொள்ளப்பட்டது. செனுரன் முத்துசாமி 25 ரன்னுடனும், கைல் வெரைன் ஒரு ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இந்தியா தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 3 விக்கெட் வீழ்த்தி இருந்தார்.
இந்த சூழலில் 2-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. தொடர்ந்து பேட்டிங் செய்த முத்துசாமி - வெரைன் ஜோடி சிறப்பாக ஆடி இந்திய அணிக்கு தண்ணி காட்டியது. 7-வது விக்கெட்டுக்கு 88 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய நிலையில் இந்த ஜோடியை ஜடேஜா பிரித்தார். அவரது பந்துவீச்சில் கைல் வெரைன் 45 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து முத்துசாமி உடன் மார்கோ ஜான்சன் கை கோர்த்தார். இதில் முத்துசாமி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த ஜான்சன் அதிரடியாக ஆடினார். இவர்களின் பொறுப்பான ஆட்டத்தால் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 400 ரன்களை கடந்தது.
அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய செனுரன் முத்துசாமி சதமடித்து அசத்தினார். மறுமுனையில் மார்கோ ஜான்சன் அரைசதம் கடந்தார். சதமடித்த சிறிது நேரத்திலேயே முத்துசாமி 109 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சிமோன் ஹார்மர் 5 ரன்களில் போல்டானார்.
சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 151.1 ஓவர்களில் 489 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட மார்கோ ஜான்சன் 93 ரன்களில் கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார். இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளும், சிராஜ், பும்ரா மற்றும் ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதனையடுத்து இந்தியா தனது முதல் இன்னிங்சை தொடங்க உள்ளது.