இந்தியா மீது 50% வரி விதிப்பை கண்டித்து டிரம்பின் உருவ பொம்மையுடன் நடைபெற்ற இறுதி ஊர்வலம்: மத்திய பிரதேசத்தில் நூதன போராட்டம்
போபால்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவின் மீது 50% இறக்குமதி வரியை விதித்திருப்பது நாடு முழுவதும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவர் பாகிஸ்தானுடன் இணைந்து இந்தியாவிற்குத் துரோகம் இழைப்பதாகவும், பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் ‘பகவா கட்சி’ என்ற அமைப்பு, டிரம்பின் உருவ பொம்மைக்கு அடையாள இறுதி ஊர்வலம் நடத்தி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டது.
இதில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான தொண்டர்கள், டிரம்புக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். அதனைத் தொடர்ந்து, டிரம்பின் பதின்மூன்றாம் நாள் சடங்குக்கான அழைப்பிதழ்களையும் பொதுமக்களுக்கு விநியோகித்தனர். மேலும், 13 நாட்கள் கழித்து அவருக்காக நினைவு விருந்து நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.
வரும் நாட்களில் ‘சுதேசிப் பொருட்களை ஆதரிப்போம்’ என்ற இயக்கத்தைத் தொடங்கி, அமெரிக்கப் பொருட்களைப் புறக்கணிக்க மக்களை வலியுறுத்தப் போவதாகவும் அந்தக் கட்சி தெரிவித்துள்ளது. டிரம்பின் உருவ பொம்மைக்கு இறுதி ஊர்வலம் நடத்திய வீடியோ, தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.