2035ம் ஆண்டுக்குள் இந்தியா சார்பில் விண்வெளி நிலையம்: இஸ்ரோ தலைவர் திட்டவட்டம்
மதுரை: வரும் 2035ம் ஆண்டுக்குள் இந்தியா சார்பில் விண்வெளி நிலையம் அமைக்கப்படும் என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.மதுரை ஒத்தக்கடையில் உள்ள அரசு வேளாண்மை பல்கலைக்கழக கல்லூரியில் வைரவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக இஸ்ரோ தலைவர் நாராயணன் பங்கேற்றார். பின்னர் அவர் கூறியதாவது:இந்தியா பொருளாதாரத்தில் முன்னேறி உள்ளது. உணவு பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில் தற்போது ஏற்றுமதி செய்கிறோம், எல்விஎம் 3 தொலை தொடர்பு செயற்கை கோள் ஏவுவதற்காக ஸ்ரீஹரிகோட்டாவில் நிறுத்தப்பட்டு வருகிறது. இன்னும் செயற்கை கோள் ஏவும் தேதி முடிவு செய்யவில்லை. சந்திரயான்-4, சந்திரயான்-5 மற்றும் கிரகயான் செயற்கை கோள்களை விண்வெளிக்கு அனுப்ப திட்டமிட்டு உள்ளோம்.
குலசேகரபட்டினத்தில் 2வது ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டு 2027 மார்ச் மாதத்திற்குள் ராக்கெட் அனுப்பி வைக்கப்படும். 2024 ஜன.6ல் ஆதித்யா ராக்கெட் ஏவப்பட்டது. அதிலிருந்து 20 டெராபிட் டேட்டா வந்துள்ளது. இந்த டேட்டா உலகில் உள்ள அனைத்து விஞ்ஞானிகளுக்கும் பயன்படும். இந்தியர்களால் 2035ம் ஆண்டுக்குள் இந்திய விண்வெளி நிலையம் அமைக்கப்பட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. விண்வெளி நிலையம் அமைக்கும் பணிகள் 5 கட்டங்களாக நடத்த இருக்கிறோம். ஜி-20 செயற்கைகோள் பருவநிலை மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்கிறது. 2027க்குள் விண்வெளிக்கு மனிதர்கள் அனுப்ப திட்டமிட்டு இருக்கிறோம். இதற்கு முன்னதாக மனிதர்கள் அல்லாத 3 ஏவுகணை அனுப்ப திட்டமிட்டுள்ளோம்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சியாளர் சுபான்ஷூ சுக்லாவின் விண்வெளி ஆராய்ச்சியை பயன்படுத்தி வருகிறோம். விண்வெளியில் விதை, நெல் முளைக்க வைத்து நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் நல்ல பலன்கள் கிடைத்துள்ளது. அதில், தொடர் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. விண்வெளியில் ஆராய்ச்சி முடிவுற்று சுற்றித் திரியும் செயற்கைக்கோள்களில் எரிபொருளை நிரப்பி மீண்டும் ஆராய்ச்சிக்கு பயன்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.