இந்தியா-தென்ஆப்ரிக்கா இடையே தர்மசாலாவில் இன்று 3வது டி.20போட்டி: முன்னிலை பெறப்போவது யார்?
தர்மசாலா: இந்தியா-தென்ஆப்ரிக்கா கிரிக்கெட் அணிகள் இடையே 5 போட்டி கொண்ட டி.20 தொடர் நடந்து வருகிறது. இதில் கட்டாக்கில் நடந்த முதல் போட்டியில் இந்தியா 101 ரன் வித்தியாசத்திலும், நியூசண்டிகரில் நடந்த 2வது போட்டியில் தென்ஆப்ரிக்கா 51ரன் வித்தியாசத்திலும் வெற்றிபெற்றன. இதனால் 1-1 என தொடர் சமனில் உள்ள நிலையில் 3வது போட்டி தர்மசாலாவில் இன்று நடக்கிறது. இந்திய அணியின் பேட்டிங்கில் கேப்டன் சூர்யகுமார் யாதவ், துணை கேப்டன் சுப்மன் கில்லின் மோசமான பார்ம் தொடர்கிறது.
உலக கோப்பை தொடருக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில் இருவரும் பார்முக்கு திரும்ப் வேண்டிய நெருக்கடியில் உள்ளனர். அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் ஓரளவு சிறப்பாக ஆடி வருகின்றனர். ஷிவம் துபே பேட்டிங்கில் பெரிதாக சாதிக்கவில்லை. கில்லுக்கு பதிலாக சஞ்சு சாம்சனை ஆட வைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது. இதனால் ஆடும் லெவனில் இன்று சஞ்சு இடம்பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. பவுலிங்கில் முதல் போட்டியில் அசத்திய அர்ஷ்தீப் சிங், 2 போட்டியில் 9 வைடு பந்துகளை வீசினார். வருண் சக்ரவர்த்தி மட்டுமே தென் ஆப்ரிக்க வீரர்களுக்கு நெருக்கடி அளித்து வருகிறார். இன்று குல்தீப் யாதவ் ஆட வாய்ப்பு உள்ளது.
மறுபுறம் தென் ஆப்ரிக்கா வெற்றியை தொடரும் முனைப்பில் உள்ளது. பேட்டிங்கில் டிகாக் 2வது போட்டியில் அதிரடியில் மிரட்டினார். கேப்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், டெவால்ட் ப்ரீவிஸ், டொனோவன் ஃபெரீரா சூப்பர் பார்மில் உள்ளனர்.
மார்கோ ஜான்சன் தொடக்கத்திலேயே விக்கெட் எடுத்து இந்தியாவுக்கு நெருக்கடி அளிக்கிறார். லுங்கி நிகிடி, சிபம்லா, ஜார்ஜ் லிண்டே பவுலிங்கில் வலுசேர்க்கின்றனர். இன்று இரு அணிகளும் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற போராடும் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு போட்டி தொடங்கி நடைபெற உள்ளது.
தர்மசாலாவில் இதுவரை....
தர்மசாலா இமாச்சல்பிரதேசம் கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியத்தில் இந்தியா இதற்கு முன் 3 டி.20 போட்டிகளில் ஆடி உள்ளது. இதில் இலங்கைக்கு எதிராக 2 போட்டிகளில் வென்றுள்ள இந்தியா, தென்ஆப்ரிக்காவுக்கு எதிராக2015ல் ஆடிய ஒரு போட்டியில் தோல்விஅடைந்துள்ளது. தென்ஆப்ரிக்கா இங்கு இந்தியாவுக்கு எதிராக ஒரே ஒரு போட்டியில் ஆடி அதில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது. இங்குஇதுவரை 10 டி.20 போட்டிகள் நடந்துள்ளன. இதில் முதலில் பேட் செய்த அணி4, சேசிங் அணி 4ல் வென்றுள்ளன. 2 போட்டி கைவிடப்பட்டுள்ளது. தென்ஆப்ரிக்கா இங்கு இந்தியாவுக்கு எதிராக 200/3 ரன் எடுத்தது தான் அதிகபட்சமாகும்.