இந்தியாவில் வெள்ளி விற்பனை அதிகரித்ததால் லண்டன் வெள்ளி வர்த்தகம் முடங்கியது
திடீரென்று வெள்ளி விற்பனை இந்தியாவில் அதிகரித்ததால் லண்டன் வெள்ளி வர்த்தகமே முடங்கியதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தீபாவளியை ஒட்டி கொண்டாடப்படும் தந்தேராவின்போது முக்கிய நிகழ்வாக லட்சுமி பூஜை நடைபெறும். தீபாவளி, தந்தேரா - லட்சுமி பூஜை விழாக்களில் வழக்கமாக தங்கத்தை வைத்து மக்கள் வழிபடுவர். தற்போது தங்கம் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் வெள்ளியின் பக்கம் மக்கள் திரும்பினர்.
முதலீட்டுக்காக தங்கம் வாங்குவோரும் வெள்ளியில் முதலீடு செய்யத் தொடங்கியதால் வெள்ளியும் விற்றுத் தீர்ந்தது. இந்தியாவில் மட்டுமில்லாமல் உலக அளவிலும் ஏராளமான முதலீட்டாளர்கள் வெள்ளியை வாங்கியதால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சர்வதேச அளவில் வெள்ளியின் வர்த்தகமான லண்டன் சந்தையிலேயே வெள்ளி இருப்பு தீர்ந்து வணிகம் முடங்கிவிட்டது.
சர்வதேச அளவில் வெள்ளி விலை மாறிக் கோண்டே இருப்பதால் லண்டன் சந்தையில் விலையை நிர்ணயிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வெள்ளி வர்த்தகத்தில் ஈடுபடும் வங்கிகள் ஒவ்வொரு விலையை நிர்ணயிப்பதால் லண்டன் சந்தையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 6,000 டன் வெள்ளி கொண்ட லண்டன் சந்தையே முடங்கியதால் வர்த்தக வட்டாரத்தில் கலக்கம் அடைந்துள்ளனர். சீனாவில் திருவிழாவை ஒட்டி ஒருவார காலம் விடுப்பு என்பதால் சந்தைக்கு வெள்ளி வருவது தடைபட்டுள்ளது. வெள்ளி வரத்து சீராவதற்கு 4 நாள்களாகக் கூடும் என்றும் லண்டன் சந்தை வட்டாரங்கள் கூறியுள்ளன
இந்தியா மட்டுமின்றி உலக அளவிலும் வெள்ளிக்கான தேவை படிப்படியாக அதிகரித்து வருவதே விலை உயரக் காரணம். சூரிய மின்னுற்பத்தி தகடுகள் தயாரிப்பில் வெள்ளி பயன்படுத்தப்படுவதால் அதற்கான தேவை அதிகரித்துள்ளது. மின்னணு சாதனங்கள், செமிகண்டக்டர்கள், கணினி சிப்கள் உற்பத்தியிலும் வெள்ளி பயன்படுத்தப்படுகிறது.
EV கார்கள் உள்ளிட்ட வாகனங்களிலும், பேட்டரிகளிலும் தங்கம் பயன்படுத்தப்படுவதால் தேவை மேலும் உயர்ந்துள்ளது. மருந்துப் பொருள்களிலும் மருத்துவ சாதனங்களிலும் வெள்ளி பயன்படுத்தப்படுவதாலும் அதன் விலை உயர காரணம். நகைகள், பாத்திரங்கள், விளக்குகள், தட்டுகள், நகை தயாரிப்பிலும் வெள்ளி பயன்படுத்தப்படுவதால் தேவை உயர்ந்துள்ளது.