இந்தியாவுடனான உறவு முக்கியத்துவம் வாய்ந்தது: ஜெய்சங்கருடன் பேச்சு நடத்திய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கருத்து
நியூயார்க்: ஐக்கிய நாடுகள் சபையின் 80வது அமர்வில் பங்கேற்க அமெரிக்கா சென்றுள்ள வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று முன்தினம் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவை சந்தித்து பேசினார். இந்திய பொருட்களுக்கு 50 சதவீத இறக்குமதி வரி, ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்க எதிர்ப்பு, எச்-1பி விசா கட்டணம் ரூ.88 லட்சத்திற்கு அதிகரிப்பு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு மத்தியில் ஜெய்சங்கர், ரூபியோ இடையே முதல் முறையாக இந்த நேரடி பேச்சுவார்த்தை நடந்தது.
சுமார் ஒரு மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில் வர்த்தகம், எரிசக்தி, மருந்துகள், பாதுகாப்பு, முக்கிய கனிமங்கள், இருதரப்பு உறவு உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதன் பின் பேட்டி அளித்த ரூபியோ, ‘‘இந்தியா, அமெரிக்கா இடையேயான உறவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க இந்திய அரசு உறுதி கூறியிருக்கிறது. குவாட் உள்ளிட்ட அமைப்புகள் மூலம் இந்தோ பசிபிக் பிராந்தியத்தை மேம்படுத்த அமெரிக்காவும், இந்தியாவும் தொடர்ந்து இணைந்து பணியாற்றும்’’ என்றார்.
ஜெய்சங்கர் தனது எக்ஸ் பதிவில், ‘‘எங்கள் உரையாடல் தற்போதைய கவலைக்குரிய பல்வேறு இருதரப்பு மற்றும் சர்வதேச பிரச்னைகளை உள்ளடக்கியது. முக்கிய விஷயங்களில் நீடித்த ஈடுபாட்டின் முக்கியத்துவத்தை ஒப்புக் கொண்டோம். நாங்கள் தொடர்ந்து தொடர்பில் இருப்போம்’’ என்றார். ஏற்கனவே, ஒன்றிய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் நியூயார்க்கில் அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகளுடன் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.