இந்தியா- பாக் போரை நிறுத்தியதாக மீண்டும் கூறிய டிரம்ப் மோடி என்ன சொல்கிறார்? காங். சாடல்
புதுடெல்லி: இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட மோதலை நிறுத்தியதாக அதிபர் டிரம்ப் மீண்டும் கூறியுளள் நிலையில் இது குறித்து ஹவுடி மோடி என்ன சொல்ல வருகிறார் என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது. காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தள பதிவில், ‘‘வர்த்தகம் மற்றும் கட்டணங்களை காட்டி அச்சுறுத்தி இந்தியா -பாகிஸ்தான் இடையேயான மோதலை நிறுத்தியதாக அதிபர் டிரம்ப் கூறியதன் எண்ணிக்கை 59ஐ தொட்டுள்ளது. அவர் மீண்டும் பின்வருவனவற்றை வலியுறுத்துகிறார். 1. வர்த்தகம் மற்றும் கட்டணங்களை பயன்படுத்தி 24மணி நேரத்திற்குள் ஆபரேஷன் சிந்தூரை நிறுத்தினார். 2. இந்தியா பெரும்பாலும் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டது. 3. பிரதமர் மோடியிடம் டிரம்ப் பேசுகிறார். அவர் இந்தியாவுக்கு வரவேண்டும் என்று யார் விரும்புகிறார்கள். அவர் அடுத்த ஆண்டு இந்தியா வரக்கூடும். இந்த அனைத்தையும் பற்றி ஹவுடி மோடி என்ன சொல்லி வருகிறார்?” என்று குறிப்பிட்டுள்ளார்.