இந்தியா- பாக்.மோதலை தீர்த்து வைத்ததற்காக டிரம்புக்கு மீண்டும் நன்றி தெரிவித்த பாக். பிரதமர்
இஸ்லாமாபாத்: கடந்த மே மாதம் ஏற்பட்ட இந்தியா-பாகிஸ்தான் மோதலை தீர்த்து வைத்ததற்காக அமெரிக்க அதிபர் டிரம்புக்கு பாகிஸ்தான் பிரதமர் மீண்டும் நன்றி தெரிவித்துள்ளார். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானுக்கு எதிராக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா எடுத்தது. நான்கு நாட்கள் நீடித்த மோதல் மே 10ம் தேதி முடிவுக்கு வந்தது. இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வர இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரு புரிதலை எட்டியதாகவும், இதில் எந்த ஒரு மூன்றாம் தரப்பினரும் ஈடுபடவில்லை என்று இந்தியா தொடர்ந்து கூறி வருகிறது.
மே 10ம் தேதி அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் நீண்ட நேர இரவு பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு இந்தியாவும், பாகிஸ்தானும் முழுமையான மற்றும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்பு கொண்டன என்று சமூக ஊடகங்களில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பதிவிட்டு வருகிறார். இந்த நடவடிக்கையின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றங்களை தீர்க்க உதவியதாக டிரம்ப் பல முறை பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
இந்த நிலையில், அஜர்பைஜான் நாட்டின் வெற்றி தின பேரணி பாக்குவில் நேற்று முன்தினம் நடந்தது. இதில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கலந்து கொண்டு பேசுகையில்,‘‘ இந்தியா-பாக்.இடையே அதிபர் டிரம்ப் போர் நிறுத்தத்தை ஏற்படுத்தினார்.மேலும், தெற்காசியாவில் அமைதியை மீட்டெடுத்தது, ஒரு பெரிய போரை தடுத்து லட்சக்கணக்கான மக்களை காப்பாற்றியது அதிபர் டிரம்பின் துணிச்சலான, தீர்க்கமான தலைமை தான்’’ என்றார்.