இந்தியா-பாக். மோதலை நான் தான் முடிவுக்கு கொண்டு வந்தேன்: 58வது முறையாக அதிபர் டிரம்ப் தகவல்
நியூயார்க்: இந்தியா -பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட மோதலை வர்த்தக ஒப்பந்தத்தை காட்டி அச்சுறுத்தி நான் தான் முடிவுக்கு கொண்டு வந்தேன் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள அமெரிக்க வணிக மன்றமான மியாமியில் அதிபர் டிரம்ப் நேற்று முன்தினம் உரையாற்றினார். அப்போது அவர், வர்த்தக ஒப்பந்தங்களை முறித்துக்கொள்வதாக அச்சுறுத்திய பின், இந்தியாவும் பாகிஸ்தானும் போரை முடிவுக்கு கொண்டு வந்தன என்று மீண்டும் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அதிபர் டிரம்ப்,‘‘இந்தியா மற்றும் பாகிஸ்தானுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்தேன்.
பின்னர் அவர்கள் போரில் ஈடுபடுப்போவதாக கேள்விப்பட்டேன். ஏழு விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. எட்டாவது விமானம் மிகவும் மோசமாக சேதமடைந்தது. எட்டு விமானங்கள் அடிப்படையில் சுட்டு வீழ்த்தப்பட்டன. கடந்த 8 மாதங்களில் நீண்ட காலமாக நடந்து வந்த கொசோவா -செர்பியா, காங்கோ-ருவாண்டா உள்ளிட் எட்டு போர்களை முடிவுக்கு கொண்டு இருக்கிறேன்” என்றார். இந்தியா -மோதலின்போது இதுவரை 7 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறி வந்த அதிபர் டிரம்ப் இந்த முறை 8 விமானங்கள் என்று கூறியுள்ளார். வழக்கம்போல் அவை எந்த நாட்டுக்குரியது என்பதை அவர் குறிப்பிடவில்லை.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தள பதிவில்,‘‘வாஷிங்டன், ரியாத், தோஹா, லண்டன், தி ஹேக், ஷர்ம்-அல்-ஷேக், டோக்கியோ, அமெரிக்க அதிபரின் ஏர்போஸ் ஒன் விமானம் மற்றும் இப்போது மியாமி. இவை அனைத்தையும் ஒன்றிணைப்பது எது? ஆபரேஷன் சிந்தூரை நிறுத்துவதற்கு வர்த்தகம் மற்றும் கட்டணங்களை பயன்படுத்தி அச்சுறுத்தியதாக அதிபர் டிரம்ப் அறிவித்த இடங்கள் இவையாகும். மே பத்தாம் தேதி மாலையில் இருந்து ஆபரேஷன் சிந்தூரின் முடிவு குறித்த முதல் அறிவிப்பு வாஷிங்டன் டிசியில் இருந்து வெளியிடப்பட்டதில் இருந்து இது 58வது முறையாகும்” என்று தெரிவித்துள்ளார்.