இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் டிரோன்கள் மூலம் போதைப்பொருள் கடத்தப்படுவது அதிகரிப்பு!!
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் டிரோன்கள் மூலம் போதைப்பொருள் கடத்தப்படுவது அதிகரிக்கப்பட்டுள்ளது. சமீபகாலமாக பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழையும் ட்ரோன்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த ட்ரோன்கள் இந்திய எல்லைக்குள் போதைப் பொருள்கள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளைக் கடத்த பயன்படுத்தப்படுகின்றன. கடந்த மார்ச் மாதம் பஞ்சாப்பில் டிரோன் மூலம் பாகிஸ்தானிலிருந்து போதைப் பொருள்களை கடத்தி அதனை மாநிலம் முழுவதும் விநியோகித்து வந்த ஒரு சிறுவன் உள்பட 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
அதே போல், ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள இந்திய எல்லையில் பாகிஸ்தானிலிருந்து டிரோன் மூலம் வீசப்பட்ட போதைப் பொருள் பொட்டலங்களை எல்லைப் பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இந்த நிலையில், 2021ல் 3ஆக இருந்த போதைப்பொருள் பறிமுதல் எண்ணிக்கை 2024ல் 179ஆக உயர்ந்துள்ளதாக தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், "இந்தியாவில் பஞ்சாப் எல்லைப்பகுதிகளில் அதிகமாக டிரோன்கள் மூலம் போதைப்பொருள் கடத்தப்படுகிறது.ஹெராயின், ஓபியம் போன்ற போதைப்பொருட்கள் அதிகமாக கைப்பற்றப்பட்டுள்ளது.
2024ல் போதைப்பொருள் தொடர்பாக என்.சி.பி. 96,930 வழக்கு பதிந்து 1.22 லட்சம் பேரை கைதுசெய்தது. போதைப்பொருள் வழக்குகளில் கைதுசெய்யப்பட்ட 1.22 லட்சம் பேரில் 660 பேர் வெளிநாட்டவர்கள் ஆவர். கடந்த ஆண்டு 13,306 குவிண்டால் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைப்பற்றட்ட 13,306 குவிண்டால் போதைப்பொருட்களில் அதிகபட்சமாக 5.4 லட்சம் கிலோ கஞ்சா ஆகும்."இவ்வாறு கூறப்பட்டுள்ளது.