இந்தியாவில் மூன்றில் ஒரு பங்கினர் இதய நோயால் உயிரிழப்பு: ஆய்வு அறிக்கை வெளியீடு
டெல்லி: இந்தியாவில் ஏற்படும் மரணங்களில் மூன்றில் ஒரு பங்கினர் இதயம் சார்ந்த நோய்களால் உயிரிழப்பதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. 2021 முதல் 2023 ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் நிகழ்ந்த மரணங்களுக்கான காரணங்கள் குறித்த ஆய்வு அறிக்கையை இந்திய பதிவாளர் வெளியிட்டுள்ளார். அதில், தொற்றா நோய்களால் 56.7% பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், தொற்று நோய், தாய்வழி, பிறப்பு, ஊட்டச்சத்து குறைப்பாட்டால் 23.4% உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் அதிர்ச்சியூட்டும் தகவலாக 31% பேரின் மரணங்கள், இதய நோய் சார்ந்த பிரச்சனைகளால் நிகழ்ந்துள்ளது. அதனை தொடர்ந்து சுவாச தொற்றுகளால் 9.3% பேரும், உடலில் திசுக்களில் ஏற்படும் கட்டிகள் தொடர்பாக 6.4% சதவீதம் பேரும், சுவாச பாதிப்புகளால் 5.7% பேரும் உயிரிழந்துள்ளனர். மேலும் ஜீரண மண்டல நோய்களால் 5.3% பேர், காய்ச்சலால் 4.9% பேர், சாலை விபத்து, காயங்களால் 3.7% பேர், நீரிழிவு பாதிப்பால் 3.5% பேர், பிறப்புறுப்பு மற்றும் சிறுநீர் மண்டல உறுப்பு நோய்களால் 3% பேர், தெளிவான காரணம் இல்லாத மரணங்கள் 10.5% பேர் உயிரிழந்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
15 முதல் 29 வயதுடையவர்களின் இறப்புக்கு உள்நோக்கத்துடன் காயம் ஏற்படுத்துதல், தற்கொலை ஆகியவை பொதுவான காரணங்களாக உள்ளன. தெளிவான காரணம் தெரியாத மரணங்கள் பெரும்பாலும் 70 மற்றும் அதற்கு மேற்பட்ட வயது உடையவர்களுக்கு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.