அமெரிக்காவை விட்டு சீனா பக்கம் இந்தியா சாய்கிறதா? மோடியின் நடவடிக்கையால் காங்கிரசில் சலசலப்பு: மாறுபட்ட கருத்துகளால் அரசியல் பரபரப்பு
புதுடெல்லி: அமெரிக்காவுடனான வர்த்தகப் பதற்றங்களுக்கு மத்தியில், சீனாவுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தியது குறித்து காங்கிரஸ் கட்சிக்குள் மாறுபட்ட கருத்துகள் எழுந்துள்ளன. கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய - சீனா உறவில் பதற்றம் நிலவி வந்தது. குறிப்பாக, ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் போதும், பாகிஸ்தானுக்கு சீனா ராணுவ மற்றும் தார்மீக ஆதரவு அளித்தபோதும் இந்த உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டது.
மேலும், சில முக்கியப் பொருட்களை இந்தியாவுக்கு வழங்குவதை சீனா நிறுத்தியதுடன், ஃபாக்ஸ்கான் ஆலையில் இருந்து தனது பொறியாளர்களைத் திரும்பப் பெற்றது போன்ற நடவடிக்கைகளால் இந்தியாவிற்குப் பொருளாதார நெருக்கடியும் ஏற்பட்டது. மறுபுறம், அமெரிக்காவுடனான இந்தியாவின் உறவும், அதிபர் டிரம்பின் வர்த்தகக் கொள்கைகளால் பெரும் சவால்களைச் சந்தித்து வருகிறது.
இந்தச் சூழலில் பிரதமர் மோடி ஷாங்காய் மாநாட்டில் கலந்து கொண்டு, அங்கு சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்தியதை காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்புத் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கடுமையாக விமர்சித்துள்ளார். இது சீனாவிடம் கோழைத்தனமாக அடிபணிந்த செயல் என்றும், பாகிஸ்தான் - சீனா கூட்டணியை மோடி கண்டுகொள்ளவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதேபோல், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும், அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளுக்குப் பயந்து, ஒன்றிய பாஜக அரசு எதிரி நாடான சீனாவிடம் தஞ்சம் புகுந்துள்ளது என்று விமர்சித்துள்ளார். இருப்பினும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், வெளியுறவுக் குழுவின் தலைவருமான சசி தரூர், இதற்கு மாறுபட்ட கருத்தைத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘அமெரிக்காவுடனான உறவு மோசமடைந்துள்ள நிலையில், சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது சமநிலையை மீட்டெடுக்கத் தேவையான நடவடிக்கையாகும். இரு பெரும் வல்லரசு நாடுகளுடனும் நாம் பகைமையைப் பாராட்ட முடியாது. எனவே, சீனாவுடன் இந்த இக்கட்டான சூழலில் உறவைப் பேண வேண்டியது அவசியம். தேசிய நலன் என்று வரும்போது ஒன்றிய அரசு தனது நிலையில் உறுதியாக நிற்கும் என்று நம்புகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மற்ற தலைவர்களான சல்மான் குர்ஷித் மற்றும் மணீஷ் திவாரி ஆகியோர், ‘அமெரிக்காவுடன் ஏற்பட்டுள்ள பதற்றத்திற்காக, உடனடியாக சீனா பக்கம் சாயும் திடீர் வெளியுறவுக் கொள்கையை ஒன்றிய அரசு பின்பற்றக் கூடாது. சீனாவை முழுமையாக நம்ப முடியாது. எனவே, உலகளாவிய இந்த மாற்றங்களுக்கு மத்தியில், இந்தியாவின் நலன்களைப் பாதுகாக்க ஒன்றிய அரசு மிகவும் கவனமாகத் தனது வெளியுறவுக் கொள்கையை வகுக்க வேண்டும்’ என்று அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
அதே சமயம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்ட அறிக்கையில், ‘அமெரிக்காவை மட்டுமே நம்பியிருந்தது, இந்திய வெளியுறவுக் கொள்கையின் பிழை; தற்போது சீனா மற்றும் ரஷ்யாவுடன் உறவைப் பலப்படுத்துவது சரியான பாதை’ என்று ஒன்றிய அரசின் நடவடிக்கையை வரவேற்றுள்ளது. இவ்வாறாக காங்கிரசுக்குள் மூத்த தலைவர்கள் சிலர் ஒன்றிய அரசுக்கு ஆதரவாகவும், சிலர் எதிர்ப்பாகவும் கருத்து தெரிவித்து இருப்பது அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.