இந்தியாவின் முன்னணி எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி மையமாக தமிழ்நாடு விளங்குகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள சிப்காட் குருபரபள்ளி தொழிற் பூங்காவில் உள்ள டெல்டா எலக்ட்ரானிக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் 2 புதிய விரிவாக்க திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, மேம்படுத்தப்பட்ட புதிய உற்பத்தி வரிசையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். ரூ.450 கோடி முதலீட்டில் உருவாகும் புதிய விரிவாக்க திட்டம் மூலம் 400 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஆற்றிய உரையில்;
இன்று காலையில், முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்றுவிட்டு, இந்த நிகழ்ச்சிக்கு நாங்கள் வந்திருக்கிறோம். எலக்ட்ரானிக்ஸ் துறையில், பிங்க் செங் அளப்பரிய பங்களிப்பால், டெல்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், உலகளவில் முன்னணி நிறுவனமாக உயர்ந்திருக்கிறது. இந்த வெற்றிச் சாதனைக்கு முதலில் என்னுடைய வாழ்த்துகளையும்! பாராட்டுகளையும்! நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
ஓசூர் பகுதியின் தொழில்வளர்ச்சியில், டெல்டா எலக்ட்ரானிக்ஸ் அளிக்கும் பங்களிப்புக்கு நான் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்! இப்படிப்பட்ட உங்கள் கம்பெனியின், New Delta Smart Manufacturing Unit தொடங்கப்படுவதும் - புதிய விரிவாக்கமும் எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்தியாவின் முன்னணி Electronics Production and Export மையமாக தமிழ்நாடு விளங்குகிறது. டெல்டா எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தமிழ்நாடு அரசுக்கு இடையேயான நம்முடைய கூட்டுமுயற்சி, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு வலுசேர்க்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
இந்த நேரத்தில் உங்களிடம் நான் கேட்டுக்கொள்வது, இதன் அடுத்தகட்டமாக, தமிழ்நாட்டின் மத்திய மற்றும் தென் மாவட்டங்களிலும் உங்களின் விரிவாக்க திட்டங்களை நீங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். அதுமட்டுமல்ல, தமிழ்நாட்டின் திறன்வளத்தை கருத்தில் கொண்டு, ஒரு R&D Centre-யை நீங்கள் சென்னையிலும், கோவையிலும் அமைக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் நீங்கள் மேற்கொள்ளும் தொழில் முயற்சிகளுக்கு தேவையான எல்லா உதவிகளையும் எங்கள் திராவிட மாடல் அரசு முழுமையாக வழங்கும் என கூறினார்.