வலிமையாக, இணக்கமாக உள்ளது இந்தியா கூட்டணி: செல்வப்பெருந்தகை பேட்டி
நெல்லை: சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவரின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் அவரது படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், வரும் 7ம்தேதி காங்கிரஸ் சார்பில் ‘வாக்குத் திருட்டைத் தடுப்போம், வாக்கு அதிகாரத்தைப் பெற்றுக் கொடுப்போம்’ என்ற தலைப்பில் காங்கிரஸ் மாநாடு நடக்கும் பாளையங்கோட்டை ெபல் பள்ளி மைதானத்தை செல்வப்பெருந்தகை பார்வையிட்டு மாநாட்டுக்கான கால்கோள் விழாவில் பங்கேற்றார்.
பின்னர் செல்வப்பெருந்தகை அளித்த பேட்டி:
அதிமுக ஆட்சியிலும் பொறுப்பு டிஜிபிக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர், உத்தரப்பிரதேசத்தில் கூட 5 முறை பொறுப்பு டிஜிபிக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே தமிழகத்தில் இது ஒன்றும் புதிதல்ல. தமிழக முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் குறித்து வெள்ளை அறிக்கை கேட்கும் அதிமுக, மக்களவை கூட்டத்தொடர் நடக்கும்போதே வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடியிடம் வெள்ளை அறிக்கை வெளியிட கேட்கட்டும்.
இந்தியா கூட்டணி வலிமையாகவும், இணக்கமாகவும் உள்ளது, ஏற்கனவே ஐந்து தேர்தல்களில் வெற்றி கண்டுள்ளது. தற்போதைய தேஜ கூட்டணியின் அங்கங்களான பா.ம.க., தே.மு.தி.க., ஓ.பி.எஸ். போன்றோர் வெளியேறி உள்ளனர். இந்தியா கூட்டணியின் பலம் குறையவில்லை. ஜி.கே. மூப்பனார் ஒருபோதும் பாஜவை ஆதரித்ததில்லை, இவ்வாறு அவர் தெரிவித்தார்.