சொந்த மண்ணில் இந்தியா மோசமான சாதனை; அழுத்தத்தில் இருக்கும் கம்பீர் அபத்தமாக பேசுகிறார்: மாஜி வீரர் ஸ்ரீகாந்த் ஆவேசம்
சென்னை: கொல்கத்தாவில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்த நிலையில் போட்டி நடந்த ஈடன் கார்டன் மைதானம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் வெடித்தன. இந்நிலையில், இந்திய அணியின் மாஜி கேப்டனும், அதிரடி நாயகனுமான ஸ்ரீகாந்த் கூறியதாவது: ஈடன் கார்டன் மைதானத்தில் பேய்கள் ஒன்றும் இல்லை. சிறந்த டெக்னிக்கை வெளிப்படுத்தியிருக்க வேண்டும் என்று கம்பீர் கூறுவதை என்னால் புரிந்துகொள்ளவும் முடியவில்லை, ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை. இந்த மாதிரியான ஒரு பிட்சில் எப்படி விளையாட முடியும்? நம் பேட்ஸ்மேன்கள் பலர் தற்காப்புடன் ஆட முயன்று, எல்.பி.டபிள்யூ. முறையிலோ அல்லது ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்தோ ஆட்டமிழந்தனர். ஏன்? இதுபோன்ற மோசமான ஆடுகளங்களை உருவாக்க வேண்டும்.
உருவாக்கிவிட்டு எதற்காக வீரர்களின் பேட்டிங் டெக்னிக்கை குறை கூற வேண்டும்? நீங்கள் எப்பேர்பட்ட ஜாம்பவானாக இருந்தாலும் இதுபோன்ற ஆடுகளத்தில் நிலைத்து நின்று ஆடுவது என்பது இயலாத காரியம். ஆனால், டெம்பா பவுமா ஒரு விதிவிலக்கு. ஒட்டுமொத்த வீரர்களில் அவர் ஒருவர் மட்டுமே சிறப்பாக ஆடினார். கம்பீரின் பயிற்சியின் கீழ், இந்திய அணி சொந்த மண்ணில் கடைசியாக விளையாடிய 6 டெஸ்ட் போட்டிகளில் 4ல் தோல்வியைத் சந்தித்துள்ளது. சொந்த மண்ணில் இந்திய அணியின் மிக மோசமான சாதனை இது. சொந்த நாட்டில் முழு பலத்துடன் விளையாடியும் ஏன் நம்மால் வெற்றிபெற முடியவில்லை.
`இது நாங்கள் கேட்ட பிட்ச்’ என்று கம்பீர் சொல்கிறார். அவர் மீண்டும் மீண்டும் அபத்தமான விஷயங்களையே பேசுகிறார். கம்பீர் அழுத்தத்தில் இருக்கிறாரா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. ஆனால், இந்தத் தோல்வியால் இந்திய அணி இப்போது கடும் அழுத்தத்தில் இருக்கிறது என்பது மட்டும் நிச்சயம். டெஸ்ட் மேட்ச் ஆடுவதற்கு இது தகுதியான ஆடுகளமே அல்ல. பல ஆண்டுகளாக இதே தவறை மீண்டும் மீண்டும் செய்து வருகிறோம். ஆனால் அதிலிருந்து எப்போது பாடம் கற்றுக்கொள்ள போகிறோம் என்று தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.