இந்தியா வரும் வெளிநாட்டு தலைவர்கள் எதிர்க்கட்சி தலைவரை சந்திக்க தடை: ஒன்றிய அரசு மீது ராகுல் பாய்ச்சல்
புதுடெல்லி: வெளிநாட்டுத் தலைவர்கள் எதிர்க்கட்சித் தலைவரைச் சந்திப்பதைத் தவிர்க்குமாறு மத்திய அரசு மறைமுகமாக வலியுறுத்துவதாக ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டு அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இந்தியாவின் ஜனநாயக மரபுகளின்படி, வெளிநாட்டுத் தலைவர்கள் வருகை தரும்போது எதிர்க்கட்சித் தலைவரைச் சந்தித்துப் பேசுவது முன்னாள் பிரதமர்கள் வாஜ்பாய் மற்றும் மன்மோகன் சிங் காலத்திலிருந்தே வழக்கமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் டெல்லி வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் பிரதமர் அலுவலகம் மீது அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்தார். ‘பாதுகாப்பின்மை காரணமாக எதிர்க்கட்சித் தலைவரைச் சந்திக்க வேண்டாம் என வெளிநாட்டுத் தலைவர்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்துகிறது. இது நீண்டகாலமாகப் பின்பற்றப்படும் மரபை மீறும் செயலாகும்’ என்று அவர் கடுமையாகச் சாடினார்.
ராகுலின் இந்தக் கருத்துக்கு காங்கிரஸ் எம்பிக்கள் சசி தரூர் மற்றும் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இது ஜனநாயக நெறிமுறைகளை மீறும் செயல் என்றும், இந்தியாவின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர். ராகுல் காந்தியின் இந்தக் குற்றச்சாட்டிற்கு ஆளும் பாஜக அரசு புகைப்பட ஆதாரங்களுடன் உடனடியாக மறுப்பு தெரிவித்துள்ளது. பாஜக எம்பி அனில் பலுனி தனது சமூக வலைதளப் பக்கத்தில், 2024ம் ஆண்டு ஜூன் முதல் ராகுல் காந்தி வங்கதேசம், மலேசியா, மொரீஷியஸ், நியூசிலாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளின் தலைவர்களைச் சந்தித்த புகைப்படங்களை வெளியிட்டு பதிலடி கொடுத்தார்.
‘ராகுல் காந்தி கூறுவது அப்பட்டமான பொய்’ என்று அவர் விமர்சித்துள்ளார். மேலும், பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறுகையில், ‘வெளிநாட்டுத் தலைவர்கள் யாரைச் சந்திக்க வேண்டும் என்பது முழுக்க முழுக்க அவர்களின் விருப்பத்தைப் பொறுத்தது. முக்கியத் தலைவர் ஒருவர் இந்தியா வரும் வேளையில் இத்தகைய தேவையற்ற சர்ச்சையை ராகுல் உருவாக்குவது முறையற்றது’ என்று தெரிவித்தார். அதிகாரப்பூர்வ சந்திப்புகளைத் தாண்டி பிற சந்திப்புகள் அந்தந்த நாட்டுத் தலைவர்களின் விருப்பப்படியே அமைவதாக ஒன்றிய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.