இந்தியா போன்ற நாட்டில் ஆங்கிலம் தான் பொதுமொழி: நடிகர் கமல் ஹாசன்!
சென்னை: ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள திரைப்படங்கள் வெப் தொடர்கள் பற்றிய புதிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. ஜியோஹாட்ஸ்டார் சவுத் அன்பவுண்ட் நிகழ்வு சென்னையில் இன்று நடைபெற்றது. இதனை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும் நிகழ்ச்சியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் , நடிகர் கமல்ஹாசன் இருவரும் துவக்கி வைத்து பேசினர்.
இந்த நிகழ்வில் விஜய் சேதுபதி, மோகன்லால், நாகர்ஜூனா உள்ளிட்ட தென்னிந்தியாவின் முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள், படைப்பாளிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்வில் தமிழில் வெளியாகவுள்ள முக்கிய படைப்புகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.மேலும் தென்னிந்தியப் பொழுதுபோக்கு துறையில் ஜியோ ஹாட் ஸ்டார் 4000 கோடி முதலீடு செய்வதற்கான ஒப்பந்தமும் கையெழுத்திடப்பட்டது.
இந்நிகழ்வில் கமல்ஹாசன் பேசும் பொழுது, இனி படைப்புகளுக்கும் கதைகளுக்கும் முழு மற்றும் மாநிலம் தடையாக இருக்காது. அதேபோல் இந்தியா போன்ற பல மொழிகள் இருக்கும் நாட்டில் ஆங்கிலத்தில் பேசுவது தான் சிறந்தது. இனி ஆங்கிலம் தான் பொது மொழியாகவும் இருக்க முடியும். இதன் பின்னணி உண்மை நிச்சயம் மேடையில் இருக்கும் உதயநிதி அவர்களுக்கும் புரியும். தென்னிந்திய திரைத்துறை அற்புதமான கதைகளுக்கான மையம்.
இதற்கு உதாரணமாக காந்தாரா, பாகுபலி, த்ரிஷ்யம் உள்ளிட்ட படங்களை சொல்லலாம். இனி தென்னிந்தியாவில் எடுக்கப்படும் படங்கள் பிராந்திய படங்களாக இல்லாமல் இந்திய படங்களாக வெளியாகும். அதற்கு இப்படியான டிஜிட்டல் தளங்கள் மிகப்பெரும் ஆதரவாக இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது" என்றார்.
நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில் " மொழிகளைக் கடந்து கதைகளை உருவாக்க இப்படியான டிஜிட்டல் தளங்கள் மிகப்பெரும் உதவியாக இருக்கும் மற்றும் இனி பிராந்திய படங்கள் இந்திய படங்களாக வெளியாகவும் இம்மாதிரியான முன்னெடுப்புகள் கைகொடுக்கும்" எனவும் தெரிவித்தார்.