இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கடும் எதிர்ப்பால், PM SHRI திட்டத்தில் இணையும் முடிவைக் கைவிடுகிறது கேரள அரசு
திருவனந்தபுரம் : இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கடும் எதிர்ப்பால், PM SHRI திட்டத்தில் இணையும் முடிவைக் கேரள அரசு கைவிடுகிறது. மத்திய அரசின் பிஎம் ஸ்ரீ திட்டத்தின் கீழ் புதிய கல்வி கொள்கை (தேசிய கல்வி கொள்கை) கடந்த 2020ம் ஆண்டில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் கடந்த 2022ம் ஆண்டில் நடைமுறைக்கு கெண்டு வரப்பட்டது. இந்த கல்வி கொள்கையை நம் நாட்டில் உள்ள 33 மாநிலங்கள் - யூனியன் பிரதேசங்கள் ஏற்றுக்கொண்டன. ஆனால் தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட 3 மாநிலங்கள் ஏற்கவில்லை. இதனால் இந்த 3 மாநிலங்களுக்கும் புதிய கல்வி கொள்கையின் கீழ் வழங்கப்படும் நிதியை மத்திய அரசு விடுவிக்கவில்லை. புதிய கல்வி கொள்கையை ஏற்றால் உடனடியாக நிதி ஒதுக்கப்படும் என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அரசு கேரளாவில் பி.எம்.ஸ்ரீ திட்டத்தை கொண்டு வர சம்மதித்துள்ளது. பி.எம்.ஸ்ரீ. திட்டத்துக்கான மத்திய அரசுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கேரள கல்வித்துறை செயலாளர் கையெழுத்திட்டார். இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்டு கட்சியும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியும் கடும் எதிர்ப்பை தெரிவித்தது. இந் நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கடும் எதிர்ப்பால், PM SHRI திட்டத்தில் இணையும் முடிவைக் கேரள அரசு தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது. PM SHRI திட்டத்தில் எதிர்ப்புக்குள்ளான சில நிபந்தனைகளை தளர்த்தக் கோரி மத்திய அரசுக்கு, மாநில அரசு தரப்பில் கடிதம் எழுத இருப்பதாகவும், உரிய பதில் கிடைக்கும் வரை இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வராது எனத் தகவல் வெளியாகியுள்ளது.