இந்தியாவில் 9 பேரில் ஒருவருக்கு புற்றுநோய் அபாயம்: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வு
டெல்லி: இந்தியாவில் 9 பேரில் ஒருவருக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறியுள்ளது. இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 2022ஆம் ஆண்டில் இந்தியாவில் 14.60 லட்சம் பேருக்கு புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. நடப்பாண்டில் இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு 15.70 லட்சமாக அதிகரித்துள்ளது. ஆண்டுக்கு 70,000 குழந்தைகளுக்கு புற்றுநோய் பாதிப்புகள் பதிவாகி வருவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 9 பேரில் ஒருவருக்கு தங்கள் வாழ்நாளில் புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
புகையிலை பயன்படுத்துதல், ஆல்கஹால் நுகர்வு, மோசமான உணவுப் பழக்க வழக்கம் இருப்பவர்களுக்கு புற்றுநோய் வர வாய்ப்புள்ளதாக ஐ.சி.எம்.ஆர். தனது ஆய்வு முடிவில் தெரிவித்துள்ளது. தொடக்கத்திலேயே கண்டறிவதன் மூலமாக புற்றுநோயில் இருந்து மீள முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். புற்றுநோய் பதிப்பில் இந்தியா உலக அளவில் 3ஆம் இடத்திலும் ஆசிய அளவில் 2ஆம் இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.