இந்திய ராணுவத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கும் வகையில் 'Bhairav Battalion' என்ற புதிய படைப்பிரிவுகள் சேர்க்கப்பட உள்ளதாக அறிவிப்பு!!
டெல்லி : இந்திய ராணுவத்தில் புதிய உயரடுக்கு படைப்பிரிவுகள் சேர்க்கப்பட உள்ளதாக காலாட்படை இயக்குநர் ஜெனரல் அஜய் குமார் அறிவித்துள்ளார். சீனா, பாகிஸ்தான் உடனான எல்லைப் பகுதிகளில் திடீர் தாக்குதல்கள், ரோந்து பணிகள், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்த 'Bhairav Battalion' என்ற பெயரில் புதிய படைப்பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய ராணுவத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கும் வகையில் பைரவ் பட்டாலியனின் முதல் படைப்பிரிவு நவம்பர் 1ம் தேதி ராணுவத்தில் இணைகிறது.
அடுத்த 6 மாதங்களில் இதுபோன்ற 25 படைப்பிரிவுகளை உருவாக்கவும், ஒவ்வொரு பிரிவுகளிலும் காலாட்படை, பீரங்கிகள், வான் பாதுகாப்பு அமைப்புகளை கொண்ட 250 வீரர்கள் இடம்பெறுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த லைட் கமாண்டோ பிரிவு சிறப்புப் படைகளுக்கும் காலாட்படை பிரிவுக்கும் இடையே ஒரு இணைப்பாகச் செயல்படும். கனரக ஆயுதங்கள் பொருத்தப்படாததால், அவர்களின் கவனம் வேகமான, துல்லியமான தாக்குதல்களில் இருக்கும். இது எதிரியை ஆச்சரியப்படுத்தும். கண்காணிப்பு, தாக்குதல் நடவடிக்கை இரண்டையும் செய்வதற்கே இராணுவத்தின் ஒவ்வொரு காலாட்படை பட்டாலியனிலும் ஒரு ட்ரோன் படைப்பிரிவு சேர்க்கப்படுகிறது.