இந்தியாவில் காற்று மாசு அதிகமுள்ள நகரங்களின் பட்டியலை வெளியிட்டது ஒன்றிய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்..!!
டெல்லி: இந்தியாவில் சுத்தமான காற்று வீசும் நகரங்களில் நாகப்பட்டினம் 5ம் இடம் பிடித்துள்ளது. காற்று மாசு மிகவும் மோசமாக உள்ள நகரங்களின் பட்டியலில் அரியானாவின் தருக்கேரா முதலிடத்தையும், டெல்லி 6ம் இடத்தையும் பிடித்துள்ளது. அக்டோபர் மாதத்தில் நாடு முழுவதும் உள்ள நகரங்களின் காற்றின் தரத்தை அறிந்து கொள்ளும் வகையில் காற்று தர குறியீட்டை ஒன்றிய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவில் காற்று மாசு அதிகம் உள்ள நகரங்கள், காற்று மாசு குறைவாக உள்ள நகரங்கள் பட்டியல் இடம் பெற்றுள்ளது.
இதில் டெல்லி அரியானாவை சுற்றியுள்ள நகரங்கள் பெரும்பாலும் காற்று மாசு அதிகம் உள்ளவையாக உள்ளன. இதில் காற்று மாசு அதிகமாக உள்ள நகரங்களின் பட்டியலில் அரியானாவின் ரெஹாரி மாவட்டத்தில் உள்ள தருஹேரா முதலிடத்தில் உள்ளது. தருஹேரா நகரத்தில் காற்றின் தர குறியீடு 123 ஆக பதிவாகி உள்ளது. இதற்கு அடுத்தபடியாக ரோஹ்தக், காசியாபாத், நொய்டா, பல்லப்கர், டெல்லி, பிவாடி, கிரேட்டர் நொய்டா, ஹாபூர், குர்கான் ஆகிய நகரங்கள் 10 இடங்களுக்குள் உள்ளன. உத்தரபிரதேசம் மற்றும் ஹரியானாவில் இருந்து தலா 4 நகரங்கள் முதல் 10 இடங்களில் இடம்பெற்றுள்ளன.
இவை அனைத்தும் டெல்லியின் எம்.சி.ஆர் பகுதிகளுக்குள் உள்ளன. 249 நகரங்களில் 212 நகரங்கள் காற்றின் தர குறியீடு மிக மோசமாக இருப்பதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது. இதற்கிடையே சுத்தமான காற்றை கொண்ட நகரங்களின் தர வரிசையில் மேகாலயாவில் உள்ள ஷில்லாங் முதலிடத்தை பிடித்துள்ளது. ஷில்லாங்கில் காற்று தரக்குறியீடு 10 ஆக உள்ளது. சுத்தமான காற்றை கொண்ட நகரங்களாக தமிழ்நாட்டின் 3 நகரங்கள் முதல் 10 இடத்துக்குள் இடம் பெற்றுள்ளன. இதில் 5ம் இடத்தில உள்ள நாகப்பட்டினதின் காற்றின் தர குறியீடு 15 ஆகவும், 9ம் இடத்தில் உள்ள திருநெல்வேலி மற்றும் 10ம் இடத்தில் பெருந்துறையின் காற்றின் தரக்குறியீடு தலா 17 ஆகவும் உள்ளன.