சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் மிகவும் ஊழல் நிறைந்தவர் அசாம் முதல்வர் ஹிமந்தா: காங்கிரஸ் குற்றச்சாட்டு
கவுகாத்தி: அசாம் மாநிலம் கவுகாத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பவன் கேரா கூறியதாவது: அசாம் மாநிலத்தில் வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் அசாம் மக்கள் தன்னைத் தோற்கடிப்பார்கள் என்பதை முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அறிந்திருக்கிறார். எனவே, தன்னை எதிர்க்கும் நபர்களைக் கைது செய்ய அவர் காவல்துறையின் உதவியை நாடுகிறார். மேலும் அவருக்கு சாதகமாக அசாம் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல்களின் சிறப்புத் தீவிர திருத்தத்தை நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அசாம் மாநிலத்திற்கு வெளியே இருந்து வாக்காளர்களைக் கொண்டுவருவதற்காக அசாமில் சிறப்புத் திருத்தம் நடத்தப்பட்டு வருகிறது. இது அசாம் மக்களின் வாக்களிக்கும் உரிமையை பலவீனப்படுத்தும். வாக்களிக்கும் உரிமை என்பது மக்களின் அடையாளம். இது இந்த அரசாங்கத்தால் தாக்கப்பட்டுள்ளது. இந்த அநீதியையும் ஊழலையும் அசாம் மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். தேர்தல்களில் தீர்க்கமான பதிலடி கொடுப்பார்கள்.
சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் மிகவும் ஊழல் செய்தவர் ஹிமந்தா பிஸ்வா சர்மா. முதல்வர் பதவியை இழந்த உடனேயே அவரால் வெளியில் வாழ முடியாது. அவர் இருக்க வேண்டிய இடத்திற்கு அனுப்பப்படுவார். அது சிறை ஆகும். அவர் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ வழக்குகளும் என்ன ஆனது? அவர் பாஜ வாஷிங் மெஷினுக்குள் நுழைந்து சுத்தமாகிவிட்டார்.
கடந்த 7 ஆண்டுகளில் அவரும் அவரது குடும்பத்தினரும் சம்பாதித்த நிலம் மற்றும் பிற சொத்துக்களை வெளியிடுமாறு காங்கிரஸ் கட்சி அவருக்கு சவால் விடுகிறது. ஊடகங்கள் முதல்வர் மற்றும் அவரது குடும்பத்தினரின் ஊழலை அம்பலப்படுத்தும் என்றார்.