சுதந்திர தினத்தை முன்னிட்டு ரயில் நிலையத்தில் தீவிர சோதனை
திருவள்ளூர்: இன்று சுதந்திரதினம் நாடு முழுதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு திருவள்ளூர் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. திருவள்ளூர் ரயில்வே பாதுகாப்புப்படை ஆய்வாளர் சித்ராதேவி தலைமையிலான காவலர்கள், பாதுகாப்புப்படை உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் (இருப்பு பாதை), தமிழ்நாடு திருவள்ளூர் ரயில் நிலைய உதவி ஆய்வாளர் ஆனந்தன் மற்றும் பாதுகாப்பு போலீசார் வெடிகுண்டு சோதனை கருவி கொண்டு 6 நடைமேடைகள் மற்றும் மின்சார ரயில்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனை ரயில் நிலைய நுழைவு வாயல் மற்றும் ரயில் நிலைய வளாகம் முழுவதும் பயணியர் அமரும் இடம், டிக்கெட் வழங்கும் இடம், நடைமேடை, குப்பைத்தொட்டி, கடைகள், ஆட்டோ ஸ்டாண்ட், சைக்கிள் ஸ்டாண்ட் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்டது. இந்த சோதனையில், சந்தேகப்படும்படியாக சூட்கேஸ், பைகள் போன்றவை இருந்தால் அவற்றை தொடக்கூடாது என்றும், உடனடியாக காவல்துறைக்கு 139 என்ற எண்ணிற்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.