79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு விமான பயணிகளுக்கு கட்டண சலுகைகள்
மீனம்பாக்கம்: இந்தியாவின் 79வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, ஏர்இந்தியா மற்றும் ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் ஏர்லைன்ஸ் விமான நிறுவனங்கள், நாளை (11ம் தேதி) முதல் வரும் 15ம் தேதிவரை தங்களின் விமானங்களில் செல்லும் பயணிகளுக்கு கட்டண சலுகைகளை அறிவித்துள்ளன. அதன்படி, இணையதளம், செல்போன் ஆப், டிக்கெட் கவுன்டர்கள் உள்பட அனைத்து விதங்களிலும் ஏர்இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு இச்சலுகைகள் வழங்கப்படுகின்றன.
உள்நாட்டு பயண சலுகை விமான கட்டணம் ரூ.1,279 முதல் துவங்குகிறது. பன்னாட்டு விமான பயணிகளுக்கு ரூ.4,279 முதல் சலுகை கட்டணம் துவங்குகிறது. அதேபோல் தங்களின் லக்கேஜ்களை கொண்டு செல்லும் பயணிகளுக்கும் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த சலுகை விமான டிக்கெட்டுகளை www.airindiaexpress.com என்ற இணையதளத்திலும், Airindia Express என்ற மொபைல் ஆப் மூலமாகவும் முன்பதிவு செய்யலாம். இதன்மூலம் சுமார் 5 மில்லியன் பயணிகள் பயன்பெறுவர்.